×

220 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜாஜி ஹால் தீர்வை பூச்சு முறையில் புனரமைப்பு: பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

துரைப்பாக்கம்: பழமை வாய்ந்த தீர்வை பூச்சு முறையில் ராஜாஜி ஹால் ரூ.16 கோடியில் புனரமைக்கும் பணி இம்மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். துக்கம், சந்தோஷம், கண்ணீர், சோகம், ஆனந்தம் என பல உணர்வுகளை தாங்கி நிற்கிறது சென்னை ராஜாஜி ஹால். இந்த இடத்தில்தான் பல திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கி கூட்டங்கள், பொது விழாக்கள், கண்காட்சிகள் வரை அரங்கேறியது. இவ்வாறான பல உணர்வுகள் நிறைந்திருக்கும் ராஜாஜி ஹால் சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ளது. இது 220 ஆண்டுகள் பழமையான கட்டிடம். இந்த கட்டிடம் விருந்து மண்டபம் என்றும் அழைக்கப்பட்டது.

மைசூர் அரசனான திப்பு சுல்தானுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் வெற்றியை நினைவுகூரும் வகையில் பொறியாளர் ஜான் கோல்டிங்ஹாமால் இந்த மண்டபத்தை கட்டினார். எட்வர்ட் கிளைவ் பிரபுவின் ஆட்சி காலமான 1802ல் கட்டுமான பணி முடிந்தது. அரசு விழாக்கள் மற்றும் விருந்துகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செவ்வக வடிவ மண்டபம் 1800களின் பிற்பகுதியில் மாற்றப்பட்டது. முழு கட்டிடமும் சுண்ணாம்பு சாந்தில் செங்கற்கள் மூலம் கட்டப்படது. இந்திய விடுதலைக்கு முன்பு ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டமன்ற கூட்டங்கள் இந்த அரங்கிலேயே நடத்தப்பட்டன. அதன் நினைவாக ராஜாஜி காலத்துக்கு பின் இந்த இடத்துக்கு ராஜாஜி அரங்கம் என பெயர் மாற்றப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் பொறியாளகள் குழுவினர்அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 17 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி 17 கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை தொடங்கியது. இதில், அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில்: ராஜாஜி ஹால் புனரமைக்க டெண்டர் பணி முடிந்துள்ளது. மே மாதம் இறுதி அல்லது ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதால் அதன் அமைப்பு மாறாமல் புதுப்பிக்க உள்ளோம். சாதாரணமான சிமென்ட் இல்லாமல் பழமையான முறைப்படியே மறுசீரமைக்கப்பட உள்ளது. அதாவது, ராஜாஜி ஹால் கட்டப்பட்டபோது பின்பற்றப்பட்ட அதே கட்டிடக் கலை பாணியில் மீண்டும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுகிறது.

குறிப்பாக சாதாரணமான சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் பழமை வாய்ந்த தீர்வை பூச்சு முறையே பயன்படுத்தப்படும். சுண்ணாம்பு கலவையுடன் கடுக்காய், வெல்லம், நாட்டுக் கோழி முட்டை, கற்றாழை ஆகியவை கலந்து சுமார் 15 நாட்கள் ஊறவைக்கப்படுகிறது. இதுபோன்று தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவை, 100 சதவிதம் தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும். இந்த பூச்சு முறை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடங்கி 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* தலைவர்களின் இறுதி அஞ்சலி
சமூக பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த மண்டபம் பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகும். முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, காமராஜ் ஆகியோரின் உடல்கள் மாநிலத்தில் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் ராமசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உடல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான இந்த மண்டபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பதிவேடுகள் சேமிக்கப்படுகின்றன.

* ராணி எலிசபெத் பிறந்தநாள் விழா
பிரிட்டிஷ் காலத்தின் சகாப்தத்தில் ‘காவலரை மாற்றுவது’ இது லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வாகும். வெள்ளி வர்ணம் பூசப்பட்ட இரும்புக் கதவுகள் கொண்ட இந்த மண்டபம் ஒரு காலத்தில் ஆளுநரின் மெய்க்காவலருக்கு அடைக்கலம் அளித்தன. ஆனால் புதிய சட்டசபை வளாகம் தோன்றியவுடன் இது மறைந்து விட்டது. பிப்ரவரி 1961ல், அப்போதைய முதல்வர் காமராஜ் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் ராணி எலிசபெத் தனது பிறந்தநாள் கேக்கை ராஜாஜி ஹாலில் வெட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மேனரிஸ்ட் பாணியில்…
திறந்த மொட்டை மாடியில் நெடுவரிசைகள் மற்றும் தாழ்வான சுவர்கள் இணைக்கப்பட்ட வளைவுகளால் சூழப்பட்டது. இந்த மண்டபத்தின் பெரிய தூண்களும் படிக்கட்டுகளும் தான் இதன் முக்கிய ஈர்ப்பாகும். மண்டபத்தின் வெளிப்புற மேற்பரப்பு 16ம் நூற்றாண்டின் இத்தாலிய மேனரிஸ்ட் பாணியில் கட்டப்பட்டது. 120 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 40 அடி உயரத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எட்வர்ட் கிளைவ், ரிச்சர்ட் வெல்லஸ்லி, சர் ஐர் கூட், சர் தாமஸ் மன்ரோ, லார்ட் ஹோபார்ட் மற்றும் லார்ட் ஹாரிஸ் மற்றும் ராணி சார்லட் உள்ளிட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் உருவப்படங்கள் கொண்ட கேலரியாக உள்ளது. இந்திய தலைவர்களின் படங்களும் கேலரியில் வைக்கப்பட்டுள்ளது.

The post 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜாஜி ஹால் தீர்வை பூச்சு முறையில் புனரமைப்பு: பொதுப்பணித்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Rajaji Hall ,Dinakaran ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!