×

21 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை

தர்மபுரி, ஜூன் 20: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 21 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், பட்டா, புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, உதவி உபகரணங்கள் வேண்டியும் 385 மனுக்கள் அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 21 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளையும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ், 25 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post 21 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,People's Grievance Day ,Dharmapuri Collector ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...