×

1,639 பயனாளிகளுக்கு ₹111 கோடி தொழிற்கடன்

தர்மபுரி, செப்.22: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில் 1,639 பயனாளிகளுக்கு வங்கிகளின் மூலமாக ₹111.50 கோடி தொழிற்கடன் பெறப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

முகாமில், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள் சார்பில், அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து, வங்கியின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று சுயமாக தொழில்கள் துவங்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதில் 24 பயனாளிகளுக்கு, ₹9.65 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒப்பளிப்பு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

சுயதொழில் கடன் திட்டங்கள் இ.டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மாநில அரசின் மானியங்கள் (25 சதவீத மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கார்த்திகை வாசன், நிதி ஆலோசகர் வணங்காமுடி, தொழில் ஊக்குவிப்பு அலுவலர் வெங்கடேஸ்வரி, ரிசர்வ் வங்கி மேலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத் தலைவர்கள் வெங்கடேஸ்பாபு (தர்மபுரி), சரவணன் (கடகத்துார்), நெல் அரவை முகவர்கள் சங்க தலைவர் பாஸ்கர், வணிகர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே, மாவட்ட தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும், இந்த மையத்தில் பொது மேலாளர் ஒருவரும் இருப்பார். இவர் மூலம் தொழிலுக்கான கடனை மானியத்துடன் பெறலாம். ஒவ்வோர் ஆண்டும் இந்தியா முழுக்க 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள், கல்லூரியில் படித்து விட்டு வெளியே வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பது சிக்கலான விஷயமாக இருக்கிறது.

இந்த இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி, ஜெயிக்கத் தேவையான உதவிகளை செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக உள்ளன. சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறலாம். தொழில் முனைவோர் சமர்ப்பிக்கும் விண்ணப்பம், தொழில் மையத்தின் உதவியுடன், வங்கிகள் மூலம் தொழில் கடன் வழங்கப்படும்.
தொழில் கடன் தருவதற்கான வங்கிகளின் வரம்பானது, விண்ணப்பிக்கும் நபரது வங்கிக் கணக்கின் சிபில் ஸ்கோரை பொறுத்து மாறுபடும்.

விண்ணப்பிக்கும் நபர் தொழிற்கடன் வாங்கும் தகுதியுடையவர் என உறுதி செய்யப்பட்டபின், வங்கி மேலாளர் தொழில் தொடங்குவதற்கான இடம், தக்க சான்றுகளை ஆய்வு செய்த பின்னர், அவருக்கு கடன் வழங்கப்படும். இவற்றில் அரசின் தொழில் கடனுக்கான மானியத்தொகை, விண்ணப்பிக்கும் நபரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். உதாரணமாக, ₹10 லட்சம் மதிப்புக்கு ஒரு இ-சேவை மையம் ஒரு நபரால் தொடங்கப்படும் போது, ₹3.5 லட்சம் மானியத் தொகையை கடன் பெறுபவரின் வங்கி கணக்கில் அரசு செலுத்தி விடும். தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சம் ₹5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் அனைத்து வணிக வங்கிகளின் மூலம் முதலீட்டு தொகை வழங்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில் இதுவரை 1,639 பயனாளிகள், ₹111.50 கோடி தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post 1,639 பயனாளிகளுக்கு ₹111 கோடி தொழிற்கடன் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தம்பதியை கொலை செய்து சடலங்களுடன்...