×

பந்தயத்தில் வென்றால் ரூ.20,000 என இன்ஸ்டாவில் பதிவை போட்டு பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் அதிரடி கைது: கோயம்பேடு மேம்பாலம் மற்றும் அண்ணாநகர் சாலையில் நள்ளிரவில் பரபரப்பு

சென்னை: சென்னையில் சில இடங்களில் மீண்டும் பைக் ரேஸ் தலைதூக்கி வருகிறது. கோயம்பேடு மேம்பாலம் உள்பட பல பகுதிகளில் நள்ளிரவில் பைக் ரேஸ் நடப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோயம்பேடு, திருமங்கலம் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில் மேம்பாலங்கள் இரவு நேரத்தில் இரும்பு தடுப்பு வைத்து மூடப்பட்டது. வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி வந்ததால் இரவு நேரங்களில் பைக் ரேஸை கட்டுப்படுத்த முடிந்தது.
இதனிடையே போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு கோயம்பேடு மேம்பாலத்தில் உள்ள இரும்பு தடுப்பை அகற்றிவிட்டு ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். பைக்குகளில் சாலையில் படுவேகத்துடன் வரிசையாக கூச்சலிட்டப்படி சென்றதுடன் அவற்றை வீடியோ எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டனர். அதில், ‘அடுத்த வாரம் பைக் ரேஸ் பந்தயம் ரூ.20 ஆயிரம்’ என்று பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் சமூகவலைதள பக்கத்தில் வைரலானதால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த தகவலை ஆதாரமாக வைத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் அண்ணாநகர் போக்குவரத்து துணை ஆணையர் ஜெயகரன் மற்றும் உதவி ஆணையர் ரவி தலைமையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் நள்ளிரவில், கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, அண்ணாநகர் வழியாக ரேஸ் பைக்கில் சென்ற கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அகமது (24), மதுரைவாயல் சதாம் மெய்தீன் (22), பிராட்வே பகுதியை சேர்ந்த நபின் உஷேன் (24), அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மகேஷ்ராஜா (22), சென்னை அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ஆஷிப் (20), மேலும் இதே பகுதியை சேர்ந்த முகமது (20) உட்பட மொத்தம் 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய ரேஸ் கைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட 10 பேரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த பைக் ரேசில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடியும் வருகின்றனர்.

 

The post பந்தயத்தில் வென்றால் ரூ.20,000 என இன்ஸ்டாவில் பதிவை போட்டு பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் அதிரடி கைது: கோயம்பேடு மேம்பாலம் மற்றும் அண்ணாநகர் சாலையில் நள்ளிரவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar Road ,Chennai ,Thirumangalam ,Villivakkam ,Koyambedu flyover ,Dinakaran ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...