×

ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு: காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு

திருவில்லிபுத்தூர்: யிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு, திருவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. விருதுநகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பச்சைக்கனி. இவர்கள் இருவரும் கடந்த 2021ல் விருதுநகரில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். செங்கல்பட்டு அருகே, மயிலம் பகுதியில் செல்லும் போது சிறுநீர் கழிக்க எழுந்த பால்ராஜ், நிலை தடுமாறி திறந்த கதவு வழியாக ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து பச்சைக்கனி குடும்பத்தினர் பால்ராஜ் ஏற்கனவே காப்பீடு செய்திருந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் தொடர்பு கொண்டு, இழப்பீட்டு தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.

ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. மேலும், சரியான விபரம் கூறாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பச்சைக்கனி குடும்பத்தினர் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி, திருவில்லிபுத்தூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், ‘இந்த வழக்கில் தனியார் காப்பீட்டு நிறுவன மதுரை மேலாளர் மற்றும் சென்னை மேலாளர் ஆகிய இருவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ, ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் மற்றும் வழக்கு செலவிற்கு ரூ.10000 என ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு: காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Dinakaran ,
× RELATED பங்கு சந்தை முறைகேட்டில் பிரதமர்...