×

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,697 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்கான நிதி ரூ.2,697 கோடியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில், பல்வேறு அளவுகோல்களின்கீழ் தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் 92.86 லட்சம் குடும்பங்களுக்கு பணி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், 76.15 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91.52 லட்சம் தொழிலாளர்கள் இத் திட்டப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில், 2023-2024ம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.23-10-2023 வரை, 66.26 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழ்நாடு 31.15 கோடி மனித நாட்களை

எட்டியுள்ளது. 2023-2024 நிதியாண்டில், 19-7-2023 வரை, தொழிலாளர்களுக்கு திறன்சாரா ஊதியத்திற்காக ரூ.4,903.25 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.அதனைத் தொடர்ந்து 25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக ஒன்றிய அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்திற்கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை. 20-10-2023 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடியாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

The post 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,697 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M K Stalin ,Union Minister ,Chennai ,Tamil Nadu ,CM ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...