×

வைகுண்டத்தில் கோலாகலம் சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் இன்று தேர் பவனி.

வைகுண்டம், ஜூலை 25: வைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் இன்று(25ம் தேதி) தேர் பவனி நடைபெறுகிறது. வைகுண்டத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற புனித சந்தியாகப்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இயேசுவின் 12 சீடர்களின் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு தாமிரபரணி நதிக்கரையில் 419 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இவ்வாலயத்தின் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை பங்கு இறைமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெற்று வந்தது.

9ம் திருவிழாவான நேற்று ஆலயத்தில் காலை, மாலையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில் பங்குஇறைமக்கள் மற்றும் கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். இன்று (25ம் தேதி) 10ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, காலை 5.50 மணிக்கு திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு கூட்டுத்திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன்அந்தோனி தலைமையில் நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர் பவனி தொடங்கிறது.

தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதியுலா வருகின்றனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு திருப்பயணிகளுக்காக சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இதில் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூடுதாழை, தூத்துக்குடி, அமலிபுரம் பகுதிகளை சேர்ந்த கடலோர மீனவ மக்கள் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்பு பணிகளில் வை. டிஎஸ்பி மாயவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வை. குருசுகோவில் ஆலய பங்குத்தந்தை கிஷோக் மற்றும் அருட்சகோதரிகள், ஊர்நலக் கமிட்டியினர், பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

The post வைகுண்டத்தில் கோலாகலம் சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் இன்று தேர் பவனி. appeared first on Dinakaran.

Tags : Kolagalam Santhyakapar temple festival ,Vaikundam ,Bhavani ,Santhyakapar temple festival ,Vaikunda ,Kolakalam Santhyakapar temple festival ,
× RELATED வைகுண்டத்தில் காற்றுடன் மழை