×

வைத்தியை நம்பும் இலை நிர்வாகிகள் தேனிக்காரரை நம்பாதது குறித்த தகவலை சொல்கிறார்; wiki யானந்தா

‘‘தன் வலது கைக்கு இருக்கும் ஆதரவு கூட தன் தலைவருக்கு இல்லையே என்று யார் பேசிக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் நடந்து வரும் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் எந்த பக்கம் சாய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருவது ஊர் அறிந்த ரகசியம். தமிழகத்தின் சின்ன மாவட்டத்தை சேர்ந்த செயலாளர், மாஜி அமைச்சர் வைத்தியானவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளாராம். ஆனால், ஒரே கண்டிஷன் மட்டும் போட்டுள்ளாராம். தலைவரே, உங்களை நம்பி வேண்டுமானால் நான் வருகிறேன். நீங்கள் சொன்னால் தேனிக்காரரை சப்போர்ட் செய்கிறேன். ஆனால், தேனிக்காரரை நம்பி நான் உங்கள் அணிக்கு வரவில்லை. அதனால எங்கள் அரசியல் எதிர்காலத்தையே உங்களிடம் ஒப்படைத்துள்ளோம். எங்களை பார்த்துக்கொள்ளுங்கள். தேனிக்காரர் பொறுப்பில் இருந்தவரை யாரையும் வளர்த்துவிடவில்லை. யார் வளர்வதற்கும் அவர் உதவி செய்யல. தன் குடும்பத்தை மட்டும் வளர்த்துக்கொண்டார். அதனால எங்களுக்கு அவரை பிடிக்காது. இருந்தாலும், மாவட்டத்தை பொறுத்தவரை எங்கள் நம்பிக்கை நீங்கள்தான். நீங்கள் சொன்னால் கேட்கிறோம். எங்களை வளர்த்துவிடுங்கள் என்றாராம். எல்லாவற்றிக்கும் சரி என்றே வைத்தியானவர் சொன்னாராம். இருந்தாலும் அவரையும் நம்ப மறுத்த அடிபொடிகளின் வற்புறுத்தல் காரணமாக, சின்ன மாவட்ட செயலாளர், தேனிக்காரரை கழற்றிவிட்டு, சேலத்துக்காரர் அணிக்கு தாவிட்டாங்க. இதனால் வைத்தியானவர் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம். நம்ப வைத்து கழுத்து அறுத்துட்டாங்களே என்று புலம்பி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மகனின் கட்சி டூருக்கு தந்தை ஏன் தடை விதித்தாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குயின்பேட்டையில் மலைக்கோயில் நகரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தனது மகனுடன் சேர்ந்து குக்கர் பக்கம் விசிலடித்து கொண்டிருப்பார். மீண்டும் தாய் கழகம் தன்னை அழைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தாராம். இலை கட்சியில் இணைந்தால் கெத்தாக இருக்கலாம். கரன்சி பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். அதற்குள் மீண்டும் இலைக்கட்சியில் நாற்காலி சண்டை களைகட்டவே, அந்த கலாட்டா முடியட்டும் சேலத்துக்காரரு பக்கம் போயிடலாம் என்று விசிலடிப்பதை நிறுத்த சொன்னாராம். விரைவில் இலை பிரச்னை முடிவுக்கு வரும், அப்புறம் தேனி அல்லது சேலத்துக்கு சுற்றுலா போகலாம். இப்போதைக்கு சென்னைக்கு சுற்றுலா வேண்டாம். அரசியல் வேக்காடு அதிகமாக இருக்கிறது என்று சொல்லி அணி மாறுவதை தடுத்துவிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் எந்த  விஐபிக்கு தனி மரியாதையாம்… யார் கொடுக்கிறா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. கோவை தடாகம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான செங்கல் சூளைகள் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்த விவகாரம், நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில், சென்னை பசுமை தீர்ப்பாய உத்தரவை ஏற்று, பல செங்கல் சூளைகளுக்கு `சீல்’ வைக்கப்பட்டன. இதில், இலைக்கட்சியை சேர்ந்த நபர்களின் செங்கல் சூளைகளும் அடங்கும். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கும் மேலாக `சீல்’ வைக்கப்பட்டு கிடப்பதால், வருமானம் இன்றி தவிக்கும் பலர், `சீல்’ உடைத்து, செங்கல் சூளைக்குள் புகுந்து, இரவோடு இரவாக செங்கல்களை லாரி லாரியாக கடத்தி வருகின்றனர். புதிதாக உற்பத்தி செய்யாவிட்டாலும், ஏற்கனவே இருக்கும் ஸ்டாக்குகளை காலி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி செய்கின்றனர். இவர்களில், பலர் போலீஸ் செக்போஸ்ட்களில் சிக்கிக்கொள்கின்றனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்கின்றனர். ஆனால், இந்த கடத்தலில், இலைக்கட்சியை சேர்ந்த ஒரு வி.ஐ.பி. தனது ஆதரவாளர்களுக்கு பெரும் ஆதரவாக உள்ளார். அதாவது, செங்கல் சூளைகளில் இருந்து இரவோடு இரவாக செங்கல் லோடுகளை லாரியில் கடத்திச்செல்ல இவர் உதவுகிறார். இந்த லாரிகளை மட்டும் போலீசார் பிடிப்பதில்லை, கனிம வளத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. காரணம், கரன்சி அந்த அளவுக்கு விளையாடுகிறது. “ஒரு கண்ணுக்கு வெண்ெணய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு…’’ என்று தொழில் போட்டியில் உள்ளவங்க பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘இலை கட்சியின் இரண்டு அணிகளில் இருந்தும் அழைப்பால் திக்குமுக்காடி போன மாஜி மந்திரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்ட இலைக்கட்சியின் முன்னாள் மந்திரி ஐந்தெழுத்துக்காரர். இவர் அமைச்சராக இருந்தபோதே, கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்ட தலைநகரத்து சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இலைக்கட்சி மேலிடம் சீட் வழங்கவில்லை. தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்தார். அந்த பதவி மட்டுமில்லாமல் வேறு எந்த பதவியும் வழங்காமல் மேலிடம் புறக்கணித்தது.  இதில் கடுப்பாகி போய், காலம் கடத்தி வரும் இவர் தற்போது இலைக்கட்சியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை தனக்கு சாதகமாக்க காய் நகர்த்தி வருகிறாராம். தன்னை புறக்கணிக்க சேலத்துக்காரர்தான் காரணம் எனக்கூறி, தேனிக்காரர் பக்கம் சாயும் திட்டத்தில் உள்ளாராம். இதை தெரிந்து கொண்ட சேலம் டீம், தூது மேல் தூது அனுப்பி, இவரை தக்க வைக்க பார்க்கிறதாம். இதுவரை கண்டுகொள்ளாமலேயே விடப்பட்ட தன்னை இருதரப்பும் கொண்டாடி வருவதில், முன்னாள் மந்திரியானவர் முகத்தில் மகிழ்ச்சி வழிந்தோடி வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post வைத்தியை நம்பும் இலை நிர்வாகிகள் தேனிக்காரரை நம்பாதது குறித்த தகவலை சொல்கிறார்; wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Uncle ,Peter ,wiki ,Yananda ,
× RELATED பள்ளி கைப்பந்து போட்டி அகத்தியா அணி முதலிடம்