×
Saravana Stores

வைகை அணையில் அதிக நீர்திறப்பின்போது தண்ணீரில் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலம்

*பூங்காக்களுக்கு செல்ல மக்கள் அவதி *உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கைஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் அதிக தண்ணீர் திறப்பின்போது, பூங்கா பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் அடிக்கடி தண்ணீரில் முழ்குவதால், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணை அமைந்துள்ளது. இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது.அணையின் முன்புறம் ஆற்றின் இருபுறமும் இடது கரை மற்றும் வலதுகரைப் பூங்கா அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இந்த பூங்கா விளங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இந்த இரண்டு கரைப் பூங்காக்களையும் இணைப்பதற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் மதகு பகுதியில், தண்ணீர் வெளியேறும் இடத்தில் இந்த பாலம் உள்ளது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால், அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து அடிக்கடி அதிகபட்ச உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், நேற்று முன்தினம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் மதகுப்பகுதிக்கு முன்பு உள்ள இரண்டு கரைகளை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கி வருகிறது. பாலத்திற்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் இந்த பாலத்தை கடக்க முடியாது. சுற்றுலா பயணிகள் மறுக்கரைகளுக்கு சென்று சுற்றி பார்க்க செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சமயங்களில் பாலத்தை சுற்றுலாப் பயணிகள் கடக்காமல் இருக்க பொதுப்பணித்துறையினர் தரைப்பாலத்தின் இருபுறமும் முட்செடிகளை வைத்து மறைத்து வைத்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் வலது கரையில் இருந்து இடது கரைக்கும், இடது கரையிலிருந்து வலது கரைக்கும் பாலம் வழியாக செல்ல முடியாது.சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்வைகை அணையில் பூங்காவை சுற்றி பார்க்க வசதியாக வலது கரை, இடது கரை என இரண்டு பகுதிகளிலும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நுழைவுக் கட்டணம் செலுத்தினால், இரண்டு கரை பகுதிகளில் உள்ள பூங்காவை சுற்றிப் பார்க்கலாம். இதற்காகத்தான் இரண்டு கரைப் பகுதிகளை இணைக்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பாலத்திற்கு மேல் தண்ணீர் அதிகமாக செல்வதால் வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரண்டு கரை பகுதிகளிலும் அமைந்துள்ள பூங்காக்களை சுற்றிப் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு கரை பூங்கா பகுதியை சுற்றி பார்த்துவிட்டு மற்றொரு கரை பூங்கா பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு அணைக்கு வெளியே வந்து சாலையின் வழியாக சுமார் 2 கி.மீ தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.சேதமடைந்த தரைப்பாலம்:வைகை அணை பூங்காவில் இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், பாலம் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. மேலும், பாலத்தில் உள்ள தடுப்பு கம்பிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், விபத்து அபாயம் உருவாகியுள்ளது.உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கைவைகை அணையிலிருந்து அதிக நீர்திறப்பின்போது தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால், பூங்காக்களை முழுமையாக சுற்றி பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அணையில் இருந்து பாசனத்திற்கான நீர், ஆற்றுப்பகுதிக்கான நீர், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் என தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளின் சிரமத்தை குறைக்க இரண்டு கரைகளை இணைக்கும் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘விடுமுறை நாட்களில் வைகை அணைப் பூங்காவை சுற்றிபார்த்து பொழுது போக்க வருகிறோம். அதிக நீர்திறப்பு காலங்களில் தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. நாங்கள் இடதுகரை வழியாகதான் பூங்காவிற்குள் செல்வோம். ஆனால், வலது கரையில்தான் சிறுவர் பூங்கா உள்ளிட்ட சிறுவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. இடதுகரைப் பூங்காவை சுற்றி பார்த்துவிட்டு வலதுகரை பூங்காவிற்கு செல்ல வேண்டும் என்றால், அணையை விட்டு வெளியே சென்று சாலை வழியாக நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

The post வைகை அணையில் அதிக நீர்திறப்பின்போது தண்ணீரில் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலம் appeared first on Dinakaran.

Tags : Waigai Dam ,Antipatti ,Vaigai dam ,Andipatti ,
× RELATED தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 61.15 அடியை எட்டியது..!!