×

வேலை கிடையாது, போக சொல்றாங்க… கலெக்டர் காலில் விழுந்து கதறிய பெண் தொழிலாளர்கள்

கோவை, மே 20: கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் 450க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் பவன்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அவர்கள் கலெக்டரின் காலில் விழுந்து, ‘‘வேலையை விட்டு போகச்சொல்றாங்க, வயசாகியிருச்சு, இனி வேலைக்கு வேண்டாம் என்கிறார்கள், எந்த காரணமும் சொல்லாமல் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கி விட்டார்கள்’’ என புலம்பினர். இது குறித்து கலெக்டர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கூறி அனுப்பி வைத்தார். ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெண் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவனத்தினர் மூலமாக நாங்கள் வேலை செய்துகொண்டு வருகிறோம். இறந்து கிடக்கும் சடலங்கள், அபாயகரமான நோய் இருந்தாலும் நாங்கள் அவர்களை தொட்டு தூக்கி வைத்தியத்திற்கு உதவி செய்கிறோம். நாங்கள் வேலைக்கு சேர்ந்து 10 வருஷத்திற்கு மேல் ஆகிறது. இன்னும் இஎஸ்ஐ, பிஎப் தொகை பிடிக்காமல் உள்ளனர். தினக்கூலி 721 ரூபாய் என சொன்னார்கள். ஆனால் இதிலும் பல ஆயிரம் ரூபாய் குறைவாகத்தான் தருகிறார்கள். சமீபத்தில் எங்கள் ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரை மாற்றிவிட்டார்கள். புதியதாக வந்தவர் ரொம்ப டார்ச்சர் செய்கிறார்.

மொத்தமாப அனைத்து தொழிலாளர்களையும் வேலையைவிட்டு அனுப்ப கெடுபிடி செய்கிறார்கள். பல ஆயிரம் பேர் செய்யவேண்டிய வேலையை 450 பேர்தான் செய்கிறோம். அதிக நேரம் வேலை செய்கிறோம், நீங்கள் போங்கள், வேறு ஆட்களை போடப்போகிறோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள். எங்கள் கம்பெனி நிர்வாகம் எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது. சென்னையில் இருந்து எப்போதாவது எங்கள் ஒப்பந்த நிறுவன அதிகாரி வந்து பேசிவிட்டு செல்வார். இந்த கூலி வேலையை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அரசாங்க வேலை கேட்கவில்லை. தினமும் சுத்தம் செய்கிற வேலை செய்யக்கூட விடாமல் இப்படி செய்கிறார்கள்’’ என்றனர்.

The post வேலை கிடையாது, போக சொல்றாங்க… கலெக்டர் காலில் விழுந்து கதறிய பெண் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Government Hospital ,District Collector ,Pawan Kumar ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...