×

வேலையே பார்க்காமல் இலைக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகள் பட்டியல் தயாராவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நாகர்கோவில்ல என்ன குழப்பமாம்… கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தி வரும் நிலையில், இந்த முகாம்களை இரவு 7 மணி வரை நடத்திட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டதாம். இரவு 7 மணி வரை நடந்தால், இரவு வீடு திரும்ப அதிக நேரம் ஆகிவிடும், எனவே மருந்தை எடுத்து வந்து மீதியை திரும்ப கொண்டு செல்ல வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்து ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்று ஒட்டுமொத்த கிராம சுகாதார செவிலியர்கள் தங்கள் எதிர்ப்பை கலெக்டரிடம் பதிவு செய்துள்ளார்களாம். இரவு பணி முடிந்து வருகின்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கு வசதியாக இரவு 7 மணி வரை வரை முகாம்களை நடத்த திட்டமிட்டிருந்த குமரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம சுகாதார செவிலியர்களின் எதிர்ப்பு தர்மசங்கடத்தையும், புதிய சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் நிலைமையை சமாளிக்க மாற்றுவழிகளை இப்போது மாவட்ட நிர்வாகம் ஆராய தொடங்கியுள்ளதாம். 2வது முகாமில் அனைத்தும் சரி செய்யப்படும் என்ற கலெக்டரின் உறுதியை ஏற்று, நர்சுகள் அமைதியாக கலைந்து சென்றார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘காசிக்கு போனா புண்ணியம் கிடைக்கும்னு சொல்லுவாங்க… சிவகங்கைக்கு போனா என்ன கிடைக்கும்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வடமாநில புண்ணிய நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் மட்டுமே 50க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. கடந்த இலைக்கட்சி ஆட்சிக்காலத்தில் இங்கே நூற்றுக்கணக்கில் சுகாதாரப் பணியாளர்கள் நேரடி நியமனத்தை அந்தந்த பகுதி கட்சி பிரமுகர்கள் நடத்தி ‘‘காசும்’’ பார்த்திருக்கிறார்கள். பணியில் இணைந்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் பகுதியின் இலைக்கட்சி பிரமுகர்களை காக்கா பிடித்து, வேலையே செய்யாமல் சம்பளம் பெற்று வருவது தற்போது தெரிய வந்திருக்கிறது. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. தற்போது ஆட்சி மாறினாலும், மீண்டும் பழைய இலைக்கட்சி பிரமுகர்களின் தயவில் சில அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு வேலையே செய்யாமல் பொழுது போக்கி வருகிறார்களாம். உண்மையில் வேலை பார்க்கிற பலருக்கும் இது பெரும் புலம்பலை தந்திருக்கிறது. குறிப்பாக, மாவட்டத்தின் மண் புகழ் ஊரில், பல் டாக்டர் இல்லாத நிலையில், இதற்கென உதவியாளர் ஒருவர் தினமும் வந்து போகிறாராம். இவர் எந்தவித வேலையும் செய்யாமலே, பெரும் சம்பளம் மட்டும் வாங்குகிறாராம். இப்படி மாவட்டம் முழுவதும் பல பணியிடங்களிலும் பணி செய்யாத ஆட்களே இருப்பதால், உரிய சிகிச்சை வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இவர்களை கண்டறிந்து களையெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக எழுப்பி உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வெயிலூர்ல வெயில்தான் அதிகம்னு சொன்னா… விதவிதமான மோசடிகளும் அதிகமாகவே இருக்காமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா பாதிப்புல, அனைத்து தரப்பு மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிச்சாங்க. ஆனா, குயின்பேட்டை மாவட்டம், கோணம் பாதியான நகராட்சியில இருக்குற ஒரு சில அதிகாரிங்க மட்டும் செழிப்பா இருந்தாங்களாம், இருக்குறாங்களாம், அதுக்கு காரணம், கோணம் பாதியான நகராட்சியில, தூய்மை பணியாளருங்க பெயர்ல ஆபிசர்சும், கான்ட்ராக்டர்களும் இணைந்து பல லட்சங்களை சுவாகா செய்து வர்றதுதானாம். இந்த நகராட்சியில, நிரந்தர பணியாளருங்க 120 பேரு, ஒப்பந்த பணியாளருங்க 210 பேரு, டிபிசி பணியாளருங்க 120 பேருன்னு மொத்தம் 450 பேரு, நகராட்சியில் வேலை செய்றதாக கணக்கு காட்றாங்களாம். ஆனால் உண்மையில அவ்ளோ பேர் வேலை செய்யலைன்னு, நகராட்சி ஊழியருங்களே குற்றம் சாட்டுறாங்க. இப்படி, ஆளே, இல்ல, ஆனா சம்பளம் மட்டும் மாசம் தவறாம வருதாம். இப்படி தில்லாலங்கடி ஆபிசர்ஸ் மாதந்தோறும் ஒரு தொகைய சம்பாதிக்கிறாங்களாம். அதேபோல, தூய்மை பணியாளர்களுக்கான பிஎப் பணத்தையும் பிடித்தம் செய்றாங்களாம். ஆனா, அதுக்கும் உரிய முறையில் தூய்மை பணியாளர்களின் கணக்கில் கடந்த 11 மாதங்களாக பிஎப் பணத்தை செலுத்தலையாம். இப்படி கோணம் பாதியான நகராட்சியில் செல்வ செழிப்போட இருக்காங்களாம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கணும்னு மக்கள் பேசிக்கிறாங்க. இதுதொடர்பாக நகராட்சிகள் நிர்வாக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கரன்சி அதிகாரிகள் அலறுகிறார்களாமே, ஏனாம்..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில், மேற்கு மண்டலத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் விஐபிக்களுக்கு எந்தெந்த அதிகாரிகள் துணையாக இருந்தார்கள் என்ற விவரம் ரகசியமாக சேகரிக்கப்பட்டு, களை எடுப்பு பணி நடந்துவருகிறது. ஏற்கனவே, காவல்துறையில் இடமாற்றம் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அடுத்து, சமீபத்தில் பத்திரப்பதிவு துறையில் இடமாற்றம் நடந்தது. நீண்ட காலமாக கோலோச்சி வந்த பதிவுத்துறை அதிகாரிகள் பலர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது, சப்தம் இல்லாமல் வருவாய்துறையிலும் அதிரடி இடமாற்றம் நடந்துள்ளது. அதாவது, உதவி கலெக்டர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதுடன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் அலுவலராக இருந்தார். நடுநிலையுடன் செயல்படாமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டார் என்ற  குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரைப்போலவே மாநில நெடுஞ்சாலை துறையில், கோவை மாவட்ட பொறுப்புல இருந்த  முக்கிய அதிகாரி ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், சென்னைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டதுடன், டம்மி போஸ்டில் ஓரங்கட்டி உட்கார  வைக்கப்பட்டுள்ளார். காவல்துறை, பதிவுத்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை  துறையை தொடர்ந்து இன்னும் பல துறைகளில் அதிரடி இடமாற்றம் இருக்கும் என்ற  எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பணம் பார்த்த பலர், பதை பதைப்பில் உள்ளனர்…’’ என முடித்தார் விக்கியானந்தா….

The post வேலையே பார்க்காமல் இலைக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகள் பட்டியல் தயாராவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Uncle ,Peter ,
× RELATED 6 ஊராட்சிகள் இணைகிறது நாகர்கோவில் மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம்