×

விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை

நாமக்கல், ஜூன் 20: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆனி மாத பருவத்திற்கேற்ற நெல் விதைகள், தானிய விதைகளில் மக்காச் சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு, தினை மற்றும் சாமை விதைகள், பயறு வகை பயிர்களில் துவரை, தட்டை பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, அவரை, பீன்ஸ் போன்ற பயிர்களின் விதைகள், எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு ஆகிய விதைகளின் வீரிய கலப்பின விதைகள் மற்றும் ரக விதைகள், தற்போது அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

இந்த விதைகளின் தரம் குறித்து விதை ஆய்வு பிரிவு ஆய்வாளர்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது வரை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,008 மெட்ரிக் டன் அளவிலான ரூ.23 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும் போது, கண்டிப்பாக விலை பட்டியலை கேட்டு பெறவேண்டும். வாங்கும் விதைகளின் பயிர் ரகம், விதைக் குவியல் எண், விதையின் தரம் மற்றும் விதை காலக்கெடு ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் நல்ல தரமான விதைகளை விதைப்பதோடு, நல்ல மகசூலும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Deputy Director ,Seed Research ,Chitra ,Salem ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி