×

விவசாயிகளுக்கு தடையின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும்

கோவை, ஏப். 26: கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா முன்னிலை வகித்தார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்ற விவசாயிகள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதை பரிசீலனைக்கு எடுத்த மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுமார் 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

2021ம் ஆண்டு திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மொத்தம் 1.69 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக 3 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புகளுக்காக காத்திருந்த நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலவச மின் இணைப்புக்காக மின்வாரிய அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் விவசாயிகள், விளைநிலங்களில் பாசன வசதிக்காக சூரியஒளி மின்சார அமைப்பை நிறுவி, மோட்டார் பம்ப்செட்டுகளை இயக்கி வருகின்றனர். இதை, தங்களது சொந்த செலவிலும், அரசின் மானிய உதவியுடனும் நிறுவியுள்ளனர். மேலும், பல விவசாயிகள் டீசலில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

பதிவு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅதில், விவசாய நிலங்களில் நீர்ப்பாசனத்துக்காக சூரியஒளி மின்சார அமைப்பை சொந்த செலவிலோ, அரசு மானியத்திலோ நிறுவியுள்ள விவசாயிகள், விவசாயம் சார்ந்த பணிகளுக்காக தாழ்வழுத்த இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தாலோ அல்லது புதிதாக விண்ணப்பித்தாலோ அவற்றை நிராகரித்து விடலாம் என கூறியுள்ளனர். இந்த சுற்றறிக்கை விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. இதை மறுபரிசீலனை செய்து, விவசாயிகளுக்கு தடையின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள பல கல் குவாரிகளில் விதிமீறல்கள் நடக்கிறது.

எனவே, அனைத்து கல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் சூலூர், மதுக்கரை மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி அன்னூர், பேரூர் வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் கனிமவள திருட்டு என்ற பெயரில் விவசாயிகளுக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, கைவிட ேவண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி, கூட்டுறவு துறை இணை பதிவாளர் கார்த்திகேயன், நில அளவை துறை உதவி இயக்குனர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தகுமார் (வேளாண்மை) மற்றும் கோவை தெற்கு, கோவை வடக்கு, பேரூர், மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை தாசில்தார்கள் பங்கேற்றனர்.

The post விவசாயிகளுக்கு தடையின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,District Collector ,Pawan Kumar ,District Revenue Officer ,Sharmila ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...