×

விபத்து குறைந்த மாவட்டம் என முதல் பரிசு பெறுங்கள் நெல்லையில் உழைப்பு குறைவு, இன்னும் அதிகம் தேவை

நெல்லை, மே 24: சென்னையை விட விபத்து சதவீதம் நெல்லையில் அதிகம் உள்ளது, விபத்து குறைந்த மாவட்டம் என முதல் பரிசை நெல்லை பெற வேண்டும். இங்கு உழைப்பு குறைவு, அதிகாரிகள் இன்னும் உழைக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: விபத்துக்களை தடுப்பதற்காகத்தான் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சாலைகளில் அமைக்கும் பிளிங்குகள் முதல் தரத்தில் அமைக்க வேண்டும். அது போல் சாலையில் வண்ணம் அடிக்கும் போது தெர்மோ பிளாஸ்ட் என்ற தரமான பெயிண்டை பயன்படுத்த வேண்டும். முதல் தரத்திற்கு தான் பணம் ஒதுக்கப்படுகிறது. குறுக்குச் சாலை பிரதான சாலையில் இணையும் இடங்களில் குறுக்குச் சாலையில் கட்டாயம் வேகத் தடை அமைக்க வேண்டும். சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலம் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் 355 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அது போல சாலைகளின் தரத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்வதற்காக 53 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிகம் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதை காவல் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிவேகமாக வாகனம் ஓட்டிய 4 ஆயிரத்து 333 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் 908 விபத்துக்களில் 117 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இது 17 சதவீதமாகும். எனினும் நெல்லையில் 307 விபத்துக்களில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இது 28 சதவீதமாக உள்ளது. நெல்லையில் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே அதிக கவனம் செலுத்தி இறப்பு சதவீதத்தை குறைக்க வேண்டும். நெல்லையில் உழைப்பு குறைவாக உள்ளது. இன்னும் அதிகமாக அதிகாரிகள் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விபத்து குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு முதல் பரிசு ரூ.25 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.13 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் என முதல்வர் ஆண்டுதோறும் வழங்குகிறார்.

கல்வித் தரத்தில் உயர்ந்த அறிவார்ந்த மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ள நெல்லை விபத்துக்களை குறைத்து மாநிலத்தில் முதல் பரிசை பெற வேண்டும். இதற்காக அதிகாரிகள் அரசு பணி என்று பார்க்காமல் மக்கள் பணி என்று கருதி மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அனைத்து அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு விபத்துக்களை குறைத்து மாவட்டத்தை காக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார். கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த கையேட்டை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டு, சாலை பாதுகாப்பு தொடர்பாக நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள், நெடுஞ்சாலைத் துறை ஓட்டுநர்களை பாராட்டி நற்சான்று, கேடங்களையும் வழங்கினார். முன்னதாக நெல்லை – தென்காசி சாலையில் வெள்ளாளங்குளம் பகுதியில் மரக்கன்று நட்ட அமைச்சர் எ.வ.வேலு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத் துறையால் நடப்படும் என்றார்.

The post விபத்து குறைந்த மாவட்டம் என முதல் பரிசு பெறுங்கள் நெல்லையில் உழைப்பு குறைவு, இன்னும் அதிகம் தேவை appeared first on Dinakaran.

Tags : Paddy ,Chennai ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா