×

விஜிலென்சில் சிக்கிய சார்பதிவாளர் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் வேலூர் பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் வீட்டில் ₹12 லட்சம் புதைத்திருந்த விவகாரம்

வேலூர், ஜூலை 7: வீட்டில் ₹12 லட்சம் புதைத்து வைத்து வேலூர் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சார் பதிவாளர் பதிவு இல்லாத அலுவலக பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த தணிக்கையின்போது, 8.73 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார், சார்பதிவாளராக பொறுப்பில் இருந்தபோது இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அலுவலக உதவியாளர் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கடந்த மாதம் 13ம் தேதி உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேலும் 100 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக தனிநபர்களுக்கு பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த முறைகேடுகளில் முக்கிய புள்ளிகள் பலரை பட்டியலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் 19ம் தேதி வேலூர் விஜிலென்ஸ் போலீசார் திடீரென காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது, அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ₹2.14 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் நித்தியானந்தம் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, மறுநாள்(ஜூன் 20ம் தேதி) வேலூர் அடுத்த கீழ்வல்லம் பகுதியில் உள்ள காட்பாடி சார் பதிவாளர் நித்தியானந்தத்துக்கு சொந்தமான வீட்டிலும் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த ₹12 லட்சம் உட்பட மொத்தம் ₹13 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சார் பதிவாளர் நித்தியானந்தம் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து, பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சார் பதிவாளர் நித்தியானந்தம், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதனால் பள்ளிகொண்டா சார்பதிவாளர் பிரகாசம், காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், மருத்துவ விடுப்பு முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு திரும்பிய நித்தியானந்தம், பத்திரப்பதிவு இல்லாத, அலுவலக பணிக்காக செய்யாறு மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வேலூர் மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விஜிலென்சில் சிக்கிய சார்பதிவாளர் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் வேலூர் பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் வீட்டில் ₹12 லட்சம் புதைத்திருந்த விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,department ,District ,Katpadi ,Registrar ,Dinakaran ,
× RELATED ஆயுள் தண்டனை கைதியை சித்திரவதை செய்த...