×

465 மார்க் எடுத்த மாணவிக்கு மருத்துவம் படிக்க சீட் இல்லை : குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஒதுக்கியதால் அதிர்ச்சி

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி மகள் சேரல்யாழினி (18). இவர் இந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். விளையாட்டு வீரர்கள் சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தார். இப்பிரிவில் இவர் 465 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த ஜூன் 30ம் தேதி மாலை வெளியிடப்பட்ட தகுதிப்பட்டியலில் 410 முதல் 590 மதிப்பெண்கள் பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் 465 மதிப்பெண்கள் பெற்றிருந்த சேரல்யாழினி பெயர் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கவுன்சலிங்கில் சென்று கேட்டார். பட்டியலில் பெயர் இல்லாததால் இவர் கவுன்சலிங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை.

இவரைவிட குறைவாக 445, 425, 410 மதிப்பெண்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி சேரல்யாழினி கூறுகையில், ‘‘விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில், அரசு வெளியிட்ட தொகுப்பேட்டின் அடிப்படையில் 465 மதிப்பெண்கள் பெற்றும், எனது பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பிரிவில் தேர்வு வெளிப்படையாக, நம்பகத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஐகோர்ட் மதுரை கிளையை நாடி உள்ளேன்,’’ என்றார்.

அவசர அவசரமாக நீக்கப்பட்ட தகுதிபட்டியல்

மாணவி சேரல்யாழினி மேலும் கூறுகையில், ‘‘விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான தகுதிப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் பொதுக்குழுதான் முடிவு செய்கிறது. 44 பேர் கொண்ட இந்த தகுதிப்பட்டியலை கடந்த 30ம் தேதி வெளியிட்டு, 1ம் தேதி இணையதளத்தில் இருந்து அவசர அவசரமாக நீக்கி உள்ளனர். இந்த தகுதிப்பட்டியலை தற்போது அரசின் இணையதளத்தில் பார்க்க இயலாது. இது சந்தேகங்களுக்கு இடம் கொடுக்கிறது. 26 ஆயிரம் பேர் எழுதியுள்ள நீட் மதிப்பெண் பட்டியலை தயாரித்து, அதை இன்றளவும் இணையத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, 44 பேர் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கான தகுதிப்பட்டியலை ஏன் இணையதளத்தில் இருந்து ஒரே இரவில் நீக்க வேண்டும். இதிலிருந்து பொதுக்குழுவும், தேர்வுக்குழுவும் வெளிப்படைத் தன்மையோடு செயல்படவில்லையென தெரிகிறது,’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?