×

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழக வாக்காளர் எண்ணிக்கை 6.29 கோடி

* ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்* 30ம் தேதி வரை பெயர் சேர்க்க சிறப்பு ஏற்பாடு* சோழிங்கநல்லூரில் 7 லட்சம் வாக்காளர்கள்* துறைமுகத்தில் 1.76 லட்சம் பேர்சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களைவிட பெண் வாக்காளர்களே எண்ணிக்கை அதிகம். இந்த மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.1.2022ம் ஆண்டை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் வருகிற 30ம் தேதி வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள் இதுவரை தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால் புதிதாக பதிவு செய்யவோ அல்லது நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,09,17,667 பேரும், பெண் வாக்காளர்கள் 3,19,69,522 பேரும், 3ம் பாலினத்தவர் 7,342 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக, செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 7 லட்சத்து 48 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர்.2022ம் ஆண்டும் ஜனவரி 1ம்தேதி தகுதி நாளாக கருதப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் இன்று (நேற்று) முதல் நவம்பர் 30ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். புதிதாக பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்தவர்களின் மனுக்கள் மீது டிசம்பர் 20ம் தேதிக்குள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி, தகுதியுள்ளவர்கள் வாக்காளர் பட்டியல் சேர்க்கப்படுவார்கள். இதைத்தொடர்ந்து 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்றும் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது, வங்கி, கிஸான், அஞ்சல் அலுவலக சமீபத்திய கணக்கு புத்தகம் ஆகிய ஏதேனும் ஒன்றின் நகலை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 25 வயதுக்கு கீழ் இருந்தால் வயது சான்றும் அளிக்க வேண்டும். வயது சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகல், பள்ளி நிறைவு சான்றிதழின் நகல் ஆகியன சமர்ப்பிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும்”வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELP LINE Mobile App) ஆகிய ஆன்லைன் முறையின் மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 01.01.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றார்.* 4 நாள் சிறப்பு முகாம்தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ள வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல் – படிவம் 6, பெயர் நீக்கம் – படிவம் 7 திருத்தம், முகவரி மாற்றம் – படிவம் 8 பாகம், வார்டு மாற்றம் – படிவம் 8ஏ, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6ஏ ஆகிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பொதுமக்கள் தேர்தலின்போது எந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க செல்கிறார்களோ அந்த வாக்குச்சாவடிகளில்தான் சிறப்பு முகாம் நடைபெறும்….

The post வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழக வாக்காளர் எண்ணிக்கை 6.29 கோடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sozhinganallur ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...