×

உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் மீட்பு பயிற்சி நடத்தும் கல்லூரி மீது கடும் நடவடிக்கை : கே.பி.அன்பழகன் எச்சரிக்கை

சென்னை: உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் மீட்பு பயிற்சி நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார். சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று அளித்த பேட்டி: பேரிடர் மீட்பு பயிற்சியின்போது குறிப்பிட்ட மாணவி இறந்தது எதிர்பாராமல் நடந்துவிட்டது. முறையாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர் மூலம் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டிருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. குறிப்பிட்ட பயிற்சியாளரின் தவறால் தான் மாணவி இறந்துள்ளார். பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக்கொள்ளத்தான் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்படுகிறது.  

மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில் குறிப்பிட்ட மாணவியின் இறப்புக்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கல்லூரியில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்தாலும் அவர்களில் எல்லோருக்கும் பேரிடர் மீட்புப் பயிற்சி வழங்க வேண்டியதில்லை. 10 முதல் 20 மாணவர்களுக்கு மட்டும் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கினால் போதுமானது. மற்ற மாணவர்கள் பார்வையாளர்களாக நிறுத்தினால் போதுமானது. ஒவ்வொரு கல்லூரியிலும் பேரிடர் மீட்பு பயிற்சியை கண்காணிப்பதற்கு, கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.   
    
தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் உள்ள கல்லூரிகளில் பேரிடர் மீட்புப் பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை எல்லா கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பப்பட உள்ளது. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் மாணவர்களை பேரிடர் மீட்பு பயிற்சியில் ஈடுபடுத்தும் கல்லூரிகள் மீது துறைரிதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…