பூந்தமல்லி, ஜூலை 24: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகள் உள்ளன. இதனை காண தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளையும், காட்டு பூனை 3 குட்டிகளையும் ஈன்றுள்ளது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட ெசய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வன பாதுகாப்புக்கான முன்னணி மையமாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஒரு அனகோண்டா பாம்பு, கடந்த 10ம் தேதி 9 குட்டிகளை ஈன்றது. மறுநாள் 11ம் தேதி மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றது. மேலும் இந்தியாவில் மட்டும் காணப்படும் காட்டு பூனை 13ம் தேதி அன்று 3 குட்டிகளை ஈன்றது. இதனை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை விரைவில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு: காட்டு பூனை 3 குட்டிகளை ஈன்றது appeared first on Dinakaran.