×

ரூ.52 கோடியில் 3 ஏரிகளை மறுசீரமைக்கும் பணிகள்

சேலம்: சேலத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையில்ரூ.52 கோடியில் மூக்கனேரி, போடிநாயக்கaட்டை ஏரிகள் மறுசீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்குகிறது. இதனை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் ஏரிகளை சீரமைக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் 20.26 ஏக்கரில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி மறு சீரமைப்பு, அபிவிருத்தி பணிக்குரூ.19 கோடியும், 86 ஏக்கரில் அமைந்துள்ள மூக்கனேரி மறுசீரமைப்பு பணிக்குரூ.23 கோடியும், 23.65 ஏக்கரில் அமைந்துள்ள அல்லிக்குட்டை ஏரி அபிவிருத்தி பணிக்குரூ.10 கோடியும் எனரூ.52 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்கு சென்னை நகராட்சி நிர்வாக அனுமதி கிடைத்ததையடுத்து, 3 ஏரிகளிலும் மறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை, கடந்த 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, நேற்று இப்பணிகளை மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஏரிகளை தூர்வாருதல், நிலத்தடி நீர் சேமித்தல், ஏரிகளின் கரைகளை வலுப்படுத்துதல் மற்றும் கல் பதித்தல் ஆகிய பணிகள், பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், சிறுவர்கள் விளையாடும் பகுதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சோலார் மின்விளக்கு வசதி, தடுப்பணைகளின் உறுதி தன்மை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வது குறித்தும், ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து குறித்தும், ஏரிகளில் கழிவுநீர் கலக்காமல் அதற்கு தடுப்பு கால்வாய்கள் அமைப்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குமரகிரி ஏரி, பள்ளப்பட்டி ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து,ரூ.52 கோடியில் சேலம் மூக்கனேரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரியின் மறுசீரமைப்பு, அபிவிருத்தி பணிகளை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். பணிகள் விரைவில் தொடங்கப்படும். மறுசீரமைப்பு பணிகளால் 3 ஏரிகளும் புதுப்பொலிவு பெறும்,’ என்றனர்.

The post ரூ.52 கோடியில் 3 ஏரிகளை மறுசீரமைக்கும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Mookaneri ,Bodinayak ,Mayor ,Dinakaran ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு