×

ரியல் எஸ்டேட் அதிபரை தீர்த்து கட்ட முயன்ற 2 பேர் கைது * சென்னை கூலிப்படையினர் 3 பேருக்கு வலை * செய்யாறில் பரபரப்பு கொடுத்த கடனை திரும்ப கேட்ட தகராறு

செய்யாறு, அக்.21: செய்யாறில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட ரியல் எஸ்டேட் அதிபரை சென்னை கூலிப்படையை வைத்து தீர்த்து கட்ட முயன்ற 2 பேைர போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் கிடங்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(67), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்குமாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 19ம் தேதி மதியம் நடராஜன், மனைவி ஜெயக்குமாரி, அவரது தங்கை காஞ்சனா ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, வீட்டிற்குள் திடீரென நுழைந்த 3 வாலிபர்கள் அறையில் கட்டிலில் படுத்திருந்த நடராஜனை கீழே தள்ளினர். பின்னர், அவரிடம் கத்தியை காட்டி வீட்டில் உள்ள பணம், நகை, பாண்டு பத்திரம் ஆகியவற்றை எடுத்துக் கொடு என மிரட்டினர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த நடராஜன் மனைவி ஜெயக்குமாரி, அவரது தங்கை காஞ்சனா ஆகியோரையும் அவர்கள் கீழே தள்ளினர். பின்னர், நடராஜன் கன்னத்தில் கத்தியால் கிழித்தனர். உடனே, 3 பேரும் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து நடராஜன் செய்யாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் ஓட்டி வந்த பைக் வீட்டில் அருகே இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர், அதை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நடராஜன் செய்யாறு தாலுகா, கோவிலூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர்(38) என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். கடைசியாக வாங்கிய கடன் தொகையை கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், நடராஜனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். தனது நண்பர் செய்யாறு கொடநகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(32) என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது, அவர் சென்னையில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். அவர்களை வைத்து காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவோம் என கூறியுள்ளார். பின்னர், சம்பவத்தன்று திட்டமிட்டபடி இருவரும் மறைவாக இருந்து கொண்டு, சென்னையில் இருந்து வரவழைத்த 3 வாலிபர்களிடம் பைக்கை கொடுத்து, நடராஜன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, அவர்களிடம் நடராஜன் வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து வர வேண்டும். இல்லையெனில் கடன் வாங்கிய பாண்டு பத்திரத்தையாவது எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளனர்.

அதன்படி, வீட்டிற்குள் சென்றபோது நடராஜன் உட்பட 3 பேரும் கூச்சல் போடவே, அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து, சுந்தர், விக்னேஷ் ஆகிய இருவரும், அந்த வாலிபர்களை கார் மூலம் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், அந்த வாலிபர்கள் விட்டுச்சென்ற பைக் மற்றும் நடராஜன் கொடுத்த தகவலின் பேரில் செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விசாரணையை தொடர்ந்தனர். இந்நிலையில், கொடுத்த கடனை திரும்ப கேட்டவரை ஆட்களை வைத்து தீர்த்து கட்ட முயன்ற சுந்தர், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 பைக்குகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சென்னையை சேர்ந்த 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ரியல் எஸ்டேட் அதிபரை தீர்த்து கட்ட முயன்ற 2 பேர் கைது * சென்னை கூலிப்படையினர் 3 பேருக்கு வலை * செய்யாறில் பரபரப்பு கொடுத்த கடனை திரும்ப கேட்ட தகராறு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Seyyar ,
× RELATED போதை பொருட்கள் அடங்கிய சாக்லேட்டுகள்...