சிங்கம்புணரி, மே 6: சிங்கம்புணரி நகரில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சித்தருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வணிகர் நல சங்கம் சார்பாக 82 ஆம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது. இதில் சீரணி அரங்கில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சிறியவர்கள், என ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து பெரிய கடை வீதி, வேங்கை பட்டி சாலை வழியாக கோயிலை அடைந்தனர்.
கோயிலின் முன்பு வைக்கப்பட்ட ராட்சத தொட்டியில் பால் ஊற்றப்பட்டு மின் மோட்டார் மூலம் சித்தருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாலாபிஷேகம் நடைபெற்றது. வழி நெடுகிளும் நீர் மோர், பந்தல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் சித்தர் முத்து வடுகநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர் இரவு கலை நிகழ்ச்சிகளும், சித்தர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
The post முத்து வடுகநாதர் கோயில் சித்ரா பவுர்ணமி விழா பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.