திருவாரூர், செப். 6: திருவாரூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக ஆவதற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திட்டமதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருப்பதுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி. ஐ.டி.ஐ., பட்டயபடிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
21 -35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோரின் விண்ணப்பம் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
வங்கியால் கடன் ஒப்பளிப்பாணை பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்கள் இணையதளம் வழியாக தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் துவங்க உதவிசெய்து, பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை), மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியமும் வழங்கப்படும். அதனுடன் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் அளிக்கப்படும்.
எனவே, மேற்குறிப்பிட்ட தகுதியுடைய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர்-610004 என்ற முகவரியில் உரிய விவரங்கள் பெற்றும் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மாவட்ட கலெக்டர் உத்தரவு திருவாரூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் தொழில் முனைவோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.