×

மாற்றமடையும் குழந்தையின் உணவுப்பழக்கம்…

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தை வயிறார உண்டால்தான், பெற்ற தாய் மனமாறி நிம்மதி அடைவாள். ஆனால், குழந்தையின் உணவுத்தேர்வும் விருப்பமும் குறிப்பிட்ட காலத்தில் மாற்றமடையும். இந்த மாற்றத்தை உணராமல் குழந்தை சாப்பிடவில்லையே என்று கவலை கொள்வது அல்லது அந்த வருத்தத்தையே கோபமாகக் குழந்தையிடமே காட்டுவது என்று தாய் இன்னும் தடுமாறுகிறாள். இந்த சிக்கலைத் தவிர்க்க குழந்தையின் உணவுப்பழக்கம் மாற்றமடைவதைப் புரிந்துகொள்ள வேண்டும். 8 மாத குழந்தைக்கும் ஒரு வயது குழந்தைக்கும் சாப்பிடுவதில்தான் எத்தனை வித்தியாசம்?! ஆமாம்… 4 மாத இடைவெளியில் குழந்தையிடம் உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம் பெற்றோர்கள் கவனிக்கத்தக்கது. நான்கு மாதத்தில் எத்தனை வேறுபாடு?!8 மாத குழந்தைக்கு 4 மணிக்கு ஒரு முறை உணவு கொடுத்தால் சாப்பிட்டுக் கொள்ளும். இந்த நேரம் கடந்துவிட்டால், அந்த வேளை வந்ததுமே பசியும் தாங்க முடியாது. தாயார் அவள் கழுத்தில் துணி ஒன்றை கட்டிவிடும் வரை கூட பொறுமை இருக்காது. குழந்தைக்கு அந்த நேரத்தில் பசிக்கிற காரணத்தால் அதன் குரலும் குறைந்து கேட்கும். உணவைக் கண்டதும் தன் தலையை உடன் நீட்டி வாயில் வாங்கிக் கொள்ளும். மளமளவென்று சாப்பிட்டுவிடும். என்ன உணவு என்று தெரிந்து கொள்ளக்கூட குழந்தைக்கு அக்கறையோ நேரமோ இருக்காது.ஆனால், ஒரு வயது குழந்தைக்கோ பசி இயற்கையாகவே குறைந்து விடுகிறது. சற்று விவரம் தெரிய ஆரம்பிக்கிறது. அதனால் தாயார் தட்டில் கொண்டு வரும் உணவு தனக்குத்தான் என்பதை புரிந்துகொள்கிறது. தன் முன் தட்டு சிறிது நேரம் இருக்கும் என்பதும் அதற்கு தெரியும். ஆகவே, தட்டிலுள்ள உணவை என்னவென்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கும். ஒவ்வொரு பதார்த்தத்திலும் கூசாமல் தன் விரல்களை விட்டு பார்க்கும். அது ஒட்டிக் கொண்டால் கொஞ்சம் நசுக்கி பார்க்கலாம். வாய்க்குள் விரலை விட்டு ருசியும் பார்க்கும். பின்னர் தனக்கு பிடித்த உணவை மட்டுமே சாப்பிட முன் வரும். கொஞ்சம் பசி குறைந்ததும் அல்லது பிடிக்காத உணவாக இருந்தாலும், எடுத்து சாப்பிட முடியவில்லை என்றாலும் தட்டிலுள்ள எல்லாவற்றையும் கிளறி, சிந்தி, சிதறிவிடும்.சரி… ஒரு வயதில் குழந்தைக்கு ஏன் பசி குறைகிறது?பசி குறைவதற்கு காரணமே எதுவும் இருக்காது. இந்த வயதில் பல் துலக்க ஆரம்பிப்பதால் பலர் அதையே காரணமாக கூறக்கூடும். உண்மையிலேயே பற்களில் முன் கடைவாய்ப் பற்கள் நான்கும் வெளி வரும் சமயம் மட்டுமே பசி குறைவு ஏற்படும். மற்றபடி பல் முளைப்பது பசியில்லாமைக்கு காரணமாக இருக்க முடியாது. குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பித்துவிட்டதாலும், உணவின் ருசி தெரிய ஆரம்பித்துவிட்டதாலும் பசி குறைவு ஏற்படுகிறது. தாயார் குழந்தை முன் போல் சாப்பிடவில்லையென்ற கவலையில் பலவந்தமாக உணவை திணிப்பதாலும் உணவிலிருந்த விருப்பம் போய், ஒருவித வெறுப்பும் பசி குறைவும் ஏற்படக்கூடும். பசி குறைவினால் இந்த வயதில் குழந்தை சாப்பிடுவதற்கும் அதிக நேரமாகும்.எப்படி இதை சமாளிப்பது?ஒரு வயதில் பசி குறைகிறது என்றாலும் 4 மணி நேரத்திற்கு ஒரு தடவை உணவு உட்கொள்ளும் குழந்தைக்கு உணவு நேரத்தில் சிறிதளவாவது பசி ஏற்படத்தான் செய்யும். அதனால் குழந்தை முதலில் சற்று வேகமாகவும், பின் கொஞ்சம் மெதுவாகவும் சாப்பிடும். வேகமாக சாப்பிடும் முதல் உணவு அதன் விருப்பத்திற்கேற்றதாகவும் சமநிலை உணவாகவும் அமையும்படி தாயார் பார்த்துக்கொள்வது நல்லது. பாலில் தேவையான சத்துக்கள் அத்தனையும் உள்ளன. மேலும் குழந்தை இதுவரை கோப்பையில் பால் குடித்து பழகியிருக்கும். ஆகவே, உணவின் ஆரம்பத்தில் பாலை முதலில் கோப்பையில் குழந்தை குடிக்குமளவு கொடுத்து விடுங்கள். பின்னரே தட்டில் குழந்தைக்கு முன் உணவை கொண்டு வந்து வைக்க வேண்டும். பாலில் சிறு சிறு ரொட்டி துண்டுகள், இடியாப்பம், புட்டு, ஓட்ஸ் கஞ்சி போன்ற எதையாவது சேர்த்து, ஒரு ஸ்பூனை கொடுத்து சாப்பிட பழக்குங்கள். மதிய உணவில் ஒரு கப் தயிரை எப்படியும் சேர்த்தாக வேண்டும். கடைந்த தயிரையும் ஒரு கோப்பையில் ஆரம்பத்திலேயே கொடுத்து விடுங்கள் அல்லது தயிரை சாதத்துடன் பிசைந்து தயிர் சாதமாக கொடுங்கள். மாலை 6 மணிக்கு ஒரு கோப்பை பாலுடன், பழங்களும் கொடுக்கலாம். பாலில் முளைகட்டிய கோதுமையின் பவுடர் ஒன்றிரண்டு கரண்டி அல்லது ரஸ்க் ரொட்டி பாலில் போட்டு கொடுக்கலாம். இரவு உணவுக்கு முன் அல்லது படுக்கை செல்லும் முன்பு ஒரு கோப்பை பால் கொடுத்து விடுங்கள். தனி பாலாகவோ, சாதத்துடன் கலந்து பால் சாதமாகவோ கொடுக்கலாம். பாலில் தண்ணீரோ, சீனியோ, சர்க்கரையோ, குளுகோஸோ போட்டு கொடுக்காதீர்கள். கடைகளில் டப்பாக்களில் விற்கும் எதையும் வாங்கி பாலில் சேர்த்து விடாதீர்கள். காலை, பகல், இரவு வேளைகளில் முன் குறிப்பிட்டுள்ளபடி இதர உணவுகளையும் கொடுத்து பழக்குங்கள். வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பால், பழங்கள், வைட்டமின் டி(மீன் எண்ணெய்) இவற்றை குழந்தைக்கு முதலில் கொடுத்துவிடவும்.சாப்பிடும்போது விளையாடும் குழந்தைஒரு வயது குழந்தைக்கு உணவு அளிப்பதென்பது தாயாருக்கு மிகவும் சங்கடமான காரியம். பசி குறைவும், ருசி தெரிவதும், புதுப்புது காரியங்கள் செய்வதில் குழந்தைக்கு ஏற்படும் விருப்பமும் இதன் காரணங்களாகும். குழந்தை விளையாடிக் கொண்டே உணவு கொண்டால் அது வளர்ந்து வருவதைத்தான் அதுவும் காட்டுகிறது. இந்த காலங்களில் சரியாக சாப்பிடவில்லையென்பதில் தாயாருக்கு அதிக கவலை. குழந்தைக்கு சாப்பாடு போதும் என்ற திருப்தி ஏற்படாமல் பசி இருந்து கொண்டேயிருந்தால் அதனால் சாப்பிடாமல் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. குழந்தை விளையாட ஆரம்பித்தால் அதற்கு பசி குறைந்து விட்டது, மேற்கொண்டு உணவு தேவையில்லையென்றுதானே அர்த்தம். ஆகவே, அதற்கு மேற்கொண்டும் உணவை பலவந்தமாக திணிப்பதை விட்டுவிட்டு, கவலைப்படுவதையும் விட்டு; விடுங்கள். துடைத்து, சுத்தம் செய்து, தண்ணீர் கொடுத்துவிட்டு விடுங்கள். உணவோடு விளையாடுவது ஏன்?ஒரு வயது குழந்தை தன் உணவில் விரல்களையெல்லாம் விட்டும், நசுக்கிப் பார்த்தும், பாலில் கையை விட்டுச் சிதற வைத்தும் பார்க்கும். இப்படி செய்வது குறும்பல்ல, விளையாட்டுமல்ல. முக்கியமாக உங்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்குமல்ல. பசியில்லையென்றும் அர்த்தமில்லை. குழந்தை உணவுகளை தொட்டு அவை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது. அதனால், இப்படி செய்வதை ‘செய்யாதே’ என்று அதட்டி தடுக்காதீர்கள். கையை தட்டி விடாதீர்கள். அது சாப்பிட்டுக்கொண்டே இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடட்டும். அந்த வேளை குழந்தை சரிவர சாப்பிடவில்லையென்றாலும் பரவாயில்லை. அடுத்த வேளை எல்லாம் சேர்த்து சாப்பிட்டு விடும். No Problem!தொகுப்பு: எம்.ராஜலட்சுமி

The post மாற்றமடையும் குழந்தையின் உணவுப்பழக்கம்… appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED உங்க பாப்பா பள்ளி செல்ல மறுக்கிறதா? காரணம் இதோ…