ஈரோடு, பிப்.5: ஈரோடு நேதாஜி மார்ககெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்பனையானது. ஈரோடு வ.உ.சி. மைதானம் அருகே நேதாஜி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இதில், தக்காளி மட்டும் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
ஆனால், கடந்த இரண்டு வாரமாக போதிய தக்காளி வரத்தாகததால் அதன் விலை படிப்படியாக உயர துவங்கியது. இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டும் தக்காளி 3,500 பெட்டிகளே வரத்தானது. இதன்காரணமாக, ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி கிலோவிற்கு 10 ரூபாய் விலை உயர்ந்து நேற்று ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது. இதுகுறித்து நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை செய்யும் மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மார்க்கெட்டிற்கு தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து வரத்தாகும்.
ஆனால் தற்போது, தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து போதிய தக்காளி வரத்தாகவில்லை. இதனால், தாளவாடி, ஆந்திரா பகுதிகளில் இருந்தும் குறைந்தளவே தக்காளி வரத்தாகிறது. 10 ஆயிரம் பெட்டி வரத்தாக வேண்டிய மார்க்கெட்டிற்கு வெறும் 3,500 பெட்டிகள் மட்டுமே வரத்தாகியுள்ளது. வரத்து குறைவால், தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 26 கிலோ கொண்ட தக்காளி பெட்டி மொத்த விலையில் ரூ.700க்கும், 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.350க்கும் விற்பனையானது. இதே சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் தக்காளி 1 கிலோ ரூ.35க்கு விற்பனை appeared first on Dinakaran.