×

மழைநீரை பூமிக்குள் உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த சென்னையில் 50 ஸ்பாஞ்ச் பூங்கா

சென்னை: சென்னையில் மழைநீரை உறிஞ்சி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த புதிய முயற்சியாக, திறந்தவெளி நிலங்களில் 50 ஸ்பாஞ்ச் பூங்காக்களை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 126 ஓஎஸ்ஆர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை கோடை காலம் வந்து விட்டாலே தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் அலைவது ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய வழக்கமான நிகழ்வு என்றே கூறலாம். அந்த காலக்கட்டங்களில் மக்கள், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தங்களது பட்ஜெட்டில் ஒரு பகுதி பணத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆனால் கடந்த  சில ஆண்டுகளாக பருவமழையின் தீவிரம் அதிகமிருப்பதால் குடிநீர் பிரச்னை  ஏதும் எழவில்லை. கொட்டி தீர்க்கும் மழையால் நிலத்தடி நீர்மட்டம்  உயர்வதுடன், பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. ஆனாலும் வருங்காலங்கள் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. மழையின் தாக்கம் குறையும் பட்சத்தில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது. இதனால், மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எனவே, சென்னையில் தற்போதுள்ள கட்டிடங்கள், புதிய  கட்டுமானங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு அம்சங்கள் கட்டாயம் இடம்பெற  வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி அதை தீவிரப்படுத்தி வருகிறது. ஆனாலும் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் மழை நீரானது வெறும் 3 சதவீதம் மட்டுமே பூமிக்குள் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அந்த அளவுக்கு நிலப்பகுதிகள் கட்டிடங்கள் மற்றும் சாலை, கான்கிரீட் சாலைகளால் மூடப்பட்டுள்ளது. எனவே, மழைநீரை பூமி உறிஞ்சுவதற்கான வழிமுறைகளை நாம் தான் ஏற்படுத்தியாக வேண்டும். அந்த வகையில் மழைநீர் சேகரிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய முயற்சியாக ‘ஸ்பாஞ்ச் பார்க்’எனப்படும் உறிஞ்சி பூங்காக்களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன்மூலம்  மழைநீர் அப்படியே உறிஞ்சப்பட்டு நிலத்தில் சேகரித்து வைக்கப்படும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையின் அழகை மேம்படுத்தும் வகையில் பசுமை பரப்பில் இந்த ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காக்களில் மழை காலங்களின் போது மழைநீரை சேகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி நிலத்தில் சேகரமாகும் முன்பாக இயற்கையான முறையில் வடிகட்டப்பட்டு தூய்மையான நீரை சேமிக்கும் வகையில் உருவாக்கப்படும். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் உட்பட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவை வெள்ள பாதிப்பு நிறைந்த பகுதிகளில் தடுப்பானாகவும் செயல்பட்டு வெள்ளநீர் வடிகால்களில் செல்லும் நீரை வேகத்தை குறைக்கிறது. அதுமட்டுமின்றி படிப்படியாக வெள்ளநீர் வடிந்து செல்லவும் உதவுகின்றன. சென்னை மாநகரில் இந்த வகையான ஸ்பாஞ்ச் பூங்காக்களை அமைக்க 126 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  அவற்றில் பசுமையான பரப்பை உருவாக்கி பல்வகை தாவரங்களையும் வளர்க்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் முதல்கட்டமாக 50  உறிஞ்சி பூங்காக்களை அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலப் பகுதிகள் (ஓஎஸ்ஆர்) தேர்வு  செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய  அறிவுறுத்தல்களை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி  வழங்கியுள்ளார். அதாவது, மழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட  வாய்ப்புள்ள இடங்களை கண்டறிய வேண்டும்.  அங்கு உறிஞ்சி பூங்காக்கள்  அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், திட்ட மதிப்பீடு ஆகியவற்றை ஆய்வு செய்து  அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, ஒட்டுமொத்த பணிகளும் நிறைவு பெற்ற  உடன், சென்னை மாநகர் அழகாக மாறுவதுடன் வெள்ளத்தடுப்பு, நிலத்தடி நீர்  மட்டம் ஆகியவற்றிலும் மேம்பட்ட நிலையை எட்டும் என்கின்றனர் சமூக  ஆர்வலர்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட  பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி,  126 திறந்தவெளி இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கப்பட உள்ளது.  அதில், சுற்றுசுவர் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்படும்.  மேலும், மழைநீர் வடிகால் இணைப்புடன் கூடிய குட்டை அமைக்கப்படும். இந்த  குட்டையின் அடிப்பகுதி, நீரை பூமிக்குள் உறிஞ்சும் தன்மையில்  அமைக்கப்படும். மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர்  தேங்கும்பட்சத்தில், மழைநீர் வடிகால் வாயிலாக, குட்டைக்குள் நீர் கொண்டு  வரப்படும். குட்டை நிரம்பும் பட்சத்தில், அவை வெளியேற்றும் கால்வாய்  வாயிலாக, அருகாமையில் உள்ள குட்டை அல்லது குளம் ஆகிய பகுதிகளுக்கு நீர்  கொண்டு செல்லப்படும். இதன்வாயிலாக, குடியிருப்பு பகுதிகளில் நீர்  தேக்கத்தை தடுக்க முடியும். இந்த 126 பூங்காக்களில்  முதற்கட்டமாக 50 பூங்காக்களில், குட்டையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு  ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 50  கோடி ரூபாய் தமிழக அரசு தருகிறது. இந்த புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பை  பெறுவதை அடுத்து, மற்ற இட வசதி உள்ள பூங்காக்களில் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். …

The post மழைநீரை பூமிக்குள் உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த சென்னையில் 50 ஸ்பாஞ்ச் பூங்கா appeared first on Dinakaran.

Tags : park ,Chennai ,
× RELATED வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்