×

மழைநீரை சாதகமாக பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்து விட்டால் நடவடிக்கை

திருப்பூர், மே 29: திருப்பூர் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் நொய்யல் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் போல் பனியன்களுக்கு சாயமேற்றும் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உரிய அனுமதியின்றியும், முறைகேடாகவும் செயல்பட்டு வருகிற சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மீதும், நீர்நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்து விடுகிற நிறுவனங்கள் மீதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி நீர்நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவையில் தொடங்கும் நொய்யல் ஆறு, திருப்பூர் வழியாக ஈரோடு, கரூரை சென்றடைகிறது. மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இந்த சூழலை பயன்படுத்தி முறைகேடாக செயல்படும் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை திறந்து விட வாய்ப்புள்ளது.இதுபோல் நொய்யல் ஆற்றையும் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதனையும் மீறி முறைகேட்டில் ஈடுபடுகிற சாய, சலவை ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் என அனைத்து பகுதிகளிலும் நொய்யல் ஆற்றில் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மழைநீரை சாதகமாக பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்து விட்டால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Noyyal river ,Tiruppur ,Pollution Control Board ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...