×

மதுரை மத்திய சிறை கைதிகளின் பெட்ரோல் பங்க்

  • சுழற்சி முறையில் 30 பேருக்கு வேலை
  • ஏப்.14ல் திறக்கப்பட வாய்ப்பு

மதுரை, ஏப்.5: மதுரை மத்திய சிறைச்சாலை அருகே வரும் 14ம் தேதி பெட்ரோல் பங்க் திறக்கப்படுகிறது. இது முற்றிலும் கைதிகள் மூலம் நடத்தப்படுகிறது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மதுரை உட்பட 9 மத்திய சிறைகளில் கைதிகள் மறுவாழ்வை மையமாகக் கொண்டு சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கைதிகள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில் 1,750க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேவர் பிளாக், மர வேலைகள், நர்சரி, தபால் கவர் தயாரிப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த சிறைச்சாலை வாசலில் சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் திமுக அரசு இந்த திட்டத்திற்கு புத்துணர்வு கொடுத்து, பெட்ரோல் பங்க் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மத்திய சிறையில், கைதிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. சிறைச்சாலை-ஆரப்பாளையம் சந்திப்பில் உள்ள டிஐஜி பங்களா அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது.

அதற்கான 90 சதவீத வேலைகள் முடிந்து விட்டது. வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக முதற்கட்டமாக தகவல் கிடைத்துள்ளது. பெட்ரோல் பங்கில் கைதிகள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை புழல் மற்றும் கோவை, நெல்லையில் பெட்ரோல் பங்கை கைதிகள் பராமரித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனை தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் பெட்ரோல் பங்க் திறக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. சிறைச்சாலை என்பது கைதிகளுக்கான தண்டனைக் கூடமாக மட்டும் அல்லாமல் அவர்களைத் திருத்தும் பள்ளிக்கூடமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப மதுரை சிறைச்சாலை நிர்வாகத்தினர் கைதிகளுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கின்றனர்.

இதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க் திறக்கப்படும் போது, சுழற்சி முறையில் 30 கைதிகள் மற்றும் 10 போலீசார் அங்கு பணியில் நியமிக்கப்படுவர். பணியாற்றும் கைதிகளுக்கு முறையான ஊதியம் வழங்கப்படும். இதனால் கைதிகளின் வாழ்வாதாரம் பெருகவும், ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மற்ற பெட்ரோல் பங்க்களை விட கைதிகள் விற்பனை செய்யும் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்’’ என்றார். மதுரை அரசரடி சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மத்திய சிறையில் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கும் காய்கறிகள் முதல் இறைச்சி வரை தரமானதாக உள்ளது.

பொருட்களின் விலையும் குறைவாக உள்ளது. கைதிகள் நடத்தும் டீக்கடையில் டீ, காபி ரூ.10க்கும், வடை வகைகள் ரூ.5க்கும் கிடைக்கிறது. அவையும் தரமுள்ளதாக இருக்கிறது. இதுபோன்ற தொழில்களால் பல தண்டனை கைதிகள் வெளியில் செய்து விட்டு வந்த குற்றங்களை மறந்து, புது மனிதர்களாக மாறி வருகின்றனர்’’ என்றார். மதுரை மத்திய சிறையின் அருகே பெட்ரோல் பங்க் கட்டிட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் ஆகியோர் ஆலோசனையின்படி, கைதிகளாக சிறையில் இருக்கும் கொத்தனார்களே இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுரை மத்திய சிறை கைதிகளின் பெட்ரோல் பங்க் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Central ,Jail ,Station ,Madurai Central Jail ,Dinakaran ,
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...