×

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை மதிக்காமல் கவர்னர் திருப்பி அனுப்புவது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களெல்லாம் சென்னை மாகாணத்து சட்டமன்றம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வந்ததாகவும், அப்போது இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தின் நிர்வாக நெறிமுறைப்படி, சட்டத்தினுடைய ஆட்சி நடப்பதாகவும் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட மக்களாட்சியின் விழுமியங்களை உருவாக்கிய மாமன்றத்தில் இந்த நாள் என்பது, மிக முக்கியமான நாளாகும். திமுக ஆட்சி பொறுப்பேற்று 8 மாதத்திற்குள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம்.  இந்தியா முழுமைக்குமான சமூக நீதி கல்வி கொள்கையை முன்மொழிவதற்காக இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இப்போது நாம் கூடியிருக்கிறோம்.  நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, சமூக நீதியை நிலைநாட்டிட,  மாணவர்களின் மருத்துவ கல்வி தாகத்தை தணித்திட கூடியிருக்கிறோம். நூற்றாண்டு கண்ட வரலாற்று புகழ்மிக்க கொள்கை முடிவுகளை மேற்கொண்ட உன்னதமான இந்த அவையின் இறையாண்மையை காப்பாற்றிட, 8 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த சட்டமன்றத்திற்கு, அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தை பாதுகாத்திட நாம் இன்று கூடியிருக்கிறோம்.நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை கிடையாது. அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்ற தேர்வு முறையும் கிடையாது. நீட் என்பது இந்திய மருத்துவ கவுன்சில் ஒழுங்குமுறை விதிப்படி உருவாக்கப்பட்ட ஒரு தேர்வுதான். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் 10-6-2021 அன்று ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை அளிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் என்கிற முறையில் நான் அமைத்தேன். இறுதியில் எல்லாவற்றையும் பரிசீலித்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்ற மசோதா இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வளவு விரிவாக ஆராய்ந்து, உரிய தரவுகளுடன்தான் இந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றினோம்.மொத்தம் இந்த அவையில் இருக்கக்கூடிய 234 உறுப்பினர்களில், பேரவைத் தலைவரையும் சேர்த்து, 4 பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்கலாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வை மட்டுமல்ல இந்த மாமன்றத்தின் இறையாண்மை உணர்வையும் எதிரொலித்தது. அதனை கவர்னர் ஏற்றுக்கொண்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் நமக்கே திருப்பி அனுப்பி உள்ளார். இது ஏதோ நீட் விவகாரம் மட்டுமல்ல என்பதை நான் தொடக்கத்தில் சொன்னேன். ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றினோம், அதை கவர்னர் திருப்பி அனுப்பினார் என்று மட்டும் நான் இதை பார்க்கவில்லை. இந்த சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியதன் மூலமாக நமது தமிழ்நாடு மாநிலத்தின் உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவம் தலைகவிழ்ந்து நிற்கிறது. அதுதான் வேதனைக்குரியது. அதுதான் கவலையளிக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமான, வழிகாட்டியான தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவை நிறுத்தி வைக்க முடியும், உதாசீனப்படுத்த முடியும் என்றால், இந்த இந்திய துணைக் கண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன. அரசியல் சட்டம் வகுத்து தந்துள்ள ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு எங்கே போகும். பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமன பதவியில் அமர்ந்திருக்கும் ஓர் கவர்னர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சி தத்துவத்துக்கே எதிரானது அல்லவா. பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள். யாரை நம்பி வாக்களிப்பார்கள் என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும்.நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பி வைப்பதன் மூலமாக இந்தியாவுக்கே ஒரு ஒளிவிளக்கை நாம் ஏற்றி வைக்கிறோம். திமுக எதிர்க்கட்சியாகவும், அதிமுக ஆளுங்கட்சியாகவும் அன்றைய தினம் இருந்தாலும், நாம் இணைந்து, ஒருமுகமாக நின்று நீட் விலக்கு மசோதாவை கடந்த 1-2-2017 அன்று இதே அவையில் நிறைவேற்றினோம். அந்த மசோதாவிற்குக் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறாமல் 27 மாதங்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டது. இறுதியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தோம். அந்த குழுவின் அறிக்கையை பெற்று, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டமுன்வடிவை 13-9-2021 அன்று நிறைவேற்றி அனுப்பினோம். பொதுப்பட்டியலில் உள்ள பொருள் குறித்து மாநில சட்டமன்றத்திற்கு உள்ள சட்டமியற்றும் அதிகாரத்தை பாதுகாக்கவே அரசியல் சட்டத்தில் 254 (1) என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் முரண்படும் ஒரு சட்டத்தை மாநில சட்டமன்றம் நிறைவேற்றினால், அதை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கக்கோரி கவர்னருக்கு மாநில அமைச்சரவை அறிவுறுத்தலாம். மாநில அமைச்சரவை அப்படி அறிவுறுத்தினால், கவர்னர் அதன்படி உடனடியாக செய்தாக வேண்டும்.  அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன்கீழ் மாநிலச் சட்டமன்றம் சட்டம் நிறைவேற்றினால், அரசியல் சட்டப்பிரிவு 200-ன்கீழ் அதற்கு ஒப்புதல் வழங்கக்கூடிய அதிகாரத்தை கவர்னர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். கவர்னருக்கு அனுப்பப்படும் சட்டமுன்வடிவு தன் சொந்த கொள்கைக்கு மாறாக உள்ளது என்று நிராகரிக்காமல், அமைச்சரவை என்ன அறிவுரை வழங்குகிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும். அதைத்தான் 2006ல் இருந்த கவர்னர், ‘நுழைவுத்தேர்வு ரத்து’ என்று சட்டமுன்வடிவை நம்முடைய கலைஞர் முதலமைச்சராக இருந்து இந்த சட்டமன்றம் நிறைவேற்றி அந்த வரலாற்றை படைத்திருக்கிறார்.நமக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில்தான், 13-9-2021 அன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சட்டமுன்வடிவினை நாம் நிறைவேற்றினோம். அதைக் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது கவர்னரின் அரசியல் சட்டக் கடமை. அந்த கடமையை முறையாக இனியாவது ஆளுநர் செய்வார் என நான் நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன். நாம் மட்டுமல்ல, நீங்களும் எதிர்பார்க்கலாம். அதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின், சட்டமியற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டு கவர்னர் நிறைவேற்ற வேண்டிய கடமை. ஏறக்குறைய 142 நாட்கள் கழித்து, ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பி, மீண்டும் சட்டமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கவர்னர். இந்த அசாதாரண சூழலில், அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன்கீழ் சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய சட்டமியற்றும் அதிகாரத்தைக் கேள்வி கேட்கக்கூடிய வகையில் கவர்னரின் செயல் இருக்கிற காரணத்தினால், கடந்த 5-2-2022 அன்று அனைத்துக்கட்சியை சார்ந்த சட்டமன்ற கட்சியில் இடம் பெற்றிருக்கின்ற தலைவர்களின் கூட்டத்தினை நடத்தினோம். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான், இன்றைக்கு ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவினை இந்த அவையில் மீண்டும் நான் முன்மொழிகிறேன்.அண்ணா, 30-3-1967ல் இதே அவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசியபோது, “கவர்னர் பதவியே வேண்டாமென்று சொன்னார். அது போன்றதொரு சூழலை, நமது கவர்னர் நிச்சயம் உருவாக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவினை காலம்தாழ்த்தாமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நான் நம்புகிறேன். காலம் காலமாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை காக்க, தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை காக்க, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,  ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய, விளிம்பு நிலை, கிராமப்புற மக்களின் நலனை காக்க, இந்த சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித்தர வேண்டும் என்று உங்களை எல்லாம், மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ‘மாநிலங்கள் அதிகளவில் அதிகாரங்களை பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்’ என்ற அண்ணாவின் இலக்கை அடையவும், ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கலைஞரின் முழக்கத்தை வென்றெடுக்கவும், இந்த நாள் மிக முக்கியமான நாளாக அமைந்துள்ளது.இந்த சட்டமுன்வடிவை முன்மொழிவதன் மூலமாக நானும், அதனை ஆதரித்து வாக்களிப்பதன் மூலமாக நீங்களும் செய்யும் செயல் என்பது, இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளை காப்பாற்றும். ஒற்றையாட்சி தன்மை கொண்ட நாடாக இந்தியா மாற்றப்படாமல் தடுக்கும். இறையாண்மை என்பது மக்களாட்சியில் சட்டமன்றத்திற்கு உள்ள சட்டமியற்றும் அதிகாரம் என்பதை நிலைநாட்டும். இந்திய துணைக்கண்டமானது அனைத்து தேசிய இனங்களுக்குமான நாடு என்பதை பிரகடனப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார். * பாகுபாடுதான்…கருப்பாக உள்ளவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது எத்தகைய பாகுபாடோ-அதைப்போல மாநில பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் படித்தவர்களது புத்தகங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்காததும் மிகப்பெரிய பாகுபாடுதான்.* அறிவுத்தீண்டாமைநீட் என்பது கல்விமுறை அல்ல. அது பயிற்சிமுறை. இது தனியார் பயிற்சி மையங்களைத்தான் ஊக்குவிக்கும். தனி பயிற்சி பெற முடியாதவர்கள், கல்வி பெற தகுதியற்றவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது. கட்டணம் செலுத்தி பயிற்சி எடுக்க முடியாதவர்களால் மருத்துவ படிப்புக்கு உள்ளே நுழைய முடியாது என்பதே-கட்டணம் செலுத்தி இரண்டு மூன்றாண்டு காலம் பயிற்சி பெற முடிந்தவர்களால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்பதே-இந்த 21ம் நூற்றாண்டில் மாபெரும் அறிவு தீண்டாமை.  தகுதி என்ற போர்வையில் உள்ள இந்த தீண்டாமை அகற்றப்பட வேண்டாமா? அதற்காகத்தான் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் இங்கே நாம் கொண்டு வந்திருக்கிறோம்.* மாணவர்களை கொல்லும் பலிபீடம்நீட் தேர்வு ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பல்வேறு குளறுபடிகளோடு ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் ஓரங்கட்ட கொண்டுவரப்பட்ட தேர்வு. அதனால்தான் இந்த தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம், அதிலிருந்து விலக்கு கோருகிறோம். நீட் தேர்வு என்பதை விட, அதை ‘மாணவர்களை கொல்லும் தேர்வு’ என்றே கூறிட வேண்டும். நீட் என்பது தேர்வு அல்ல, ஒரு பலிபீடம்.  அதனால்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை நாம் நிறைவேற்றினோமே தவிர, ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றிவிடவில்லை.* வெற்றி பெறும் வரை போராடுவோம்அரசமைப்பு ரீதியாக நீட் தேர்வு தேவைப்படுவதாக கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களது உரிமைக்காக எந்த சட்ட ஏற்பாட்டையும் செய்துகொள்ளலாம் என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இந்த சட்டமசோதாவை மீண்டும் கொண்டு வருகிறோம். அரசியலமைப்பு சட்டம், பாகுபாட்டுக்கு எதிரானது. ஆனால், நீட் தேர்வு பாகுபாடு காட்டுகிறது. அரசியலமைப்பு சட்டம் சமூகநீதியை வலியுறுத்துகிறது. ஆனால், நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டம், சட்டத்தின் நீதியை பேசுகிறது. ஆனால், நீட் தேர்வு, பணக்கார நீதியை பேசுகிறது. சமத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதம். ஆனால், நீட் தேர்வு, சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது நீட் தேர்வு. அதனால்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். என்னுடைய வேதனையெல்லாம், ஏழை – எளிய – கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் மிக மோசமான ஒரு தேர்வு குறித்து, அது மோசமானதுதான் என்று இவ்வளவு நீண்ட நேரம் வாதிட வேண்டியதாக இருக்கிறதே என்பது தான் என் வருத்தம். நாம் சொல்வது புரிய வேண்டியவர்களுக்கு, இன்னமும் புரியாமல் இருக்கிறதே என்பதுதான். உண்மையில், புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஆனால், நாம் வெற்றி பெறும்வரை நமது இந்த போராட்டத்தை விடமாட்டோம்….

The post மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை மதிக்காமல் கவர்னர் திருப்பி அனுப்புவது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CM. ,G.K. Stalin ,Chennai ,Chief of the CM ,Tamil Nadu ,G.K. ,Stalin ,UK ,Chief Minister of the Council ,B.C. ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த்...