×

போலி ஆவணம் தயாரித்து ₹5 கோடி சொத்து மோசடி

 

சேலம், ஜூலை 22: ஓமலூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ₹5 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை பட்டநாயக்கர்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் முரளி. இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது தாயார் மல்லிகாவின் தந்தையான எனது தாத்தா சின்னையனுக்கு ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் எனது தாய் மல்லிகாவிற்கு சேர வேண்டிய 10 ஏக்கர் நிலத்தை தாய்மாமன் கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் செல்வராஜ், பாலகிருஷ்ணன், மாணிக்கம், மகள் மணிமேகலை ஆகியோர் போலியாக அனுபவச்சான்று தயாரித்து பத்திரப்பதிவு செய்துகொண்டுள்ளனர். ₹5 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த கோவிந்தன் உள்ளிட்ட 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, மீட்டுத்தர வேண்டும், எனக்கூறியிருந்தார்.

இதுபற்றி டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் எஸ்ஐ மல்லிகா மற்றும் போலீசார் விசாரித்தனர். அதில், போலி ஆவணங்களை தயாரித்து சுமார் 10 ஏக்கர் நிலத்தை அவர்களின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தன், அவரது மகன்கள் செல்வராஜ், பாலகிருஷ்ணன், மாணிக்கம், மகள் மணிமேகலை ஆகிய 5 பேர் மீதும் கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த 5 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post போலி ஆவணம் தயாரித்து ₹5 கோடி சொத்து மோசடி appeared first on Dinakaran.

Tags : Salem ,Omalur ,Dinakaran ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு