×

பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை தாமதமானால் அலுவலர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்படும்

பெரம்பலூர், ஆக. 22: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை தாமதமானால் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 263 மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடி வந்து பொதுமக்கள் தரும் மனுக்களை அலுவலர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் கோரிக்கை மனுக்களுடன் வரும் மக்களிடம் கனிவுடன் பேசி, அவர்களுக்கான தீர்வுகளை எடுத்துக்கூறி, நடவடிக்கை எடுக்க ஆகும் காலத்தையும், அதற்கான உரிய காரணத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கிட வேண்டும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். வாரந்தோறும் பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அடுத்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். உரிய காரணங்கள் ஏதுமின்றி பொதுமக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க தாமதாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் உரிய விளக்கம் கோரப்படும். எனவே, அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களின் மனுக்களின் மிது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி 263 மனுக்கள் பெறப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருளாளன் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை தாமதமானால் அலுவலர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,People's Grievance ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...