×

புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் கைது

கள்ளக்குறிச்சி, செப். 21: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் பத்மநாபன்(43) என்பது தெரியவந்தது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சங்கராபுரம் கிளை பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் மேலாந்தல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், நடத்துனராக பணியாற்றி வரும் கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த மணிவேல் ஆகிய இருவரின் உதவியுடன் பெங்களூரில் இருந்து பேருந்தில் புகையிலை பொருட்கள்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடையில் இருந்து 1300 புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.73,020 பணம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் இருந்த ரூ.12,400 ரொக்கம் மற்றும் 90 பாக்கட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பத்மநாபனின் தம்பி ராஜேஷ்(40) உடந்தையாக இருந்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே கச்சேரிசாலை பகுதியை சேர்ந்த தண்டபானி மகன் திலீப்கிருஷ்ணன்(45) என்பவரது பெட்டிக்கடையில் 30 பாக்கட் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு கடைகள் மற்றும் வீடு ஆகிய மூன்று இடங்களில் 3 கிலோ 549 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுப்பட்ட பத்மநாதன், ராஜேஷ், திலீப்கிருஷ்ணன், அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ், நடத்துனர் மணிவேல் ஆகிய 5 பேர்கள் மீது கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் பத்மநாதன், ராஜேஷ், திலீப்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர்களையும் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதற்கு உதவிய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தால் கள்ளக்குறிச்சியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakurichi ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே 3 கார்கள்...