புதுடெல்லி: ‘அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் 6ஜி சேவையை தொடங்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 3ஜி மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த பல நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை அமைப்பான டிராயின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: இந்த ஆட்சியில் 4ஜி சேவை வெளிப்படையாக செயல்படுத்தப்பட்டு, அடுத்ததாக 5ஜி சேவை நோக்கி நகர்ந்துள்ளோம். 21ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு துறை தீர்மானிக்கும். எனவே நவீனகால உள்கட்டமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். 5ஜி நெட்வொர்க் சேவையின் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு கூடுதலாக ரூ.34 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் வேகத்தையும் அதிகரிக்கும். நாட்டின் நிர்வாகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும். வாழ்க்கையை எளிதாக்கும். வணிகம் செய்வதையும் எளிதாக்கும். மேலும், விவசாயம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களில் வளர்ச்சியை அதிகரிக்கும். 5ஜி சேவையைத் தொடர்ந்து, அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் 6ஜி சேவையை தொடங்க இந்தியா இலக்கு நிர்ணயித்து இதற்கான செயற்குழுவையும் உருவாக்கி உள்ளோம். தற்போது நாட்டில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய பயனர்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றனர். நாட்டில் 2 மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் இது 200 ஆக விரிவுபடுத்தப்பட்டு, உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. இதன் மூலம், உலகிலேயே மலிவான இணைய டேட்டா கட்டணத்தை வழங்கும் நாடுகளில் ஒன்றாக ஆரோக்கியமான போட்டியை இந்த அரசு ஊக்குவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.* இனி வெளிநாடு தேவையில்லை உள்நாட்டு 5ஜி கருவி அறிமுகம்டிராய் வெள்ளி விழாவில், சென்னை ஐஐடி தலைமையில் 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து, ரூ.220 கோடியில் உருவாக்கிய 5ஜி பரிசோதனை கருவியை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இது குறித்து பேசிய மோடி, ‘‘5ஜி பரிசோதைன கருவி உருவாக்கப்பட்டிருப்பது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இது, தொலைத்தொடர்பு துறையில் முக்கியமாக மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கான தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான படியாகும்,’’ என்றார். இந்தியாவில் 5ஜி பரிசோதனை கருவி இல்லாததால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் தயாரிப்புகளை 5ஜி நெட்வொர்க்கில் நிறுவுவதற்கு சோதனை செய்து சரிபார்க்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது….
The post பிரதமர் மோடி பேச்சு அடுத்த 10 ஆண்டில் 6ஜி சேவை appeared first on Dinakaran.