×

பாளை வஉசி மைதானத்தின் கேலரி மேற்கூரை இடிந்த விவகாரம் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை

நெல்லை, மே 24: பாளை வஉசிதம்பரனார் மைதானத்தின் கேலரி மேற்கூரை தரமில்லாமல் இடிந்து விழுந்தது தொடர்பாக ஒப்பந்தக்காரர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை மற்றும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி நெல்லை மாநகராட்சி ஆணையாளரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் நேற்று நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: பாளை மண்டலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் பாளை வ.உ.சிதம்பரனார் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடும் பூங்காவும் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வ.உ.சிதம்பரனார் மைதானத்தை மேம்படுத்தும் திட்டம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. அதற்கான பணிகள் சரிவர நடைபெறவில்லை. மேலும் மைதானத்தின் மேற்கூரை முறையாக அமைக்கப்படவில்லை.

அதன் காரணமாக தற்போது மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சேத தொகையை கணக்கிட்டு சம்பந்தப்பட்டோரிடம் வசூலிக்க வேண்டும். இதற்கு காரணமான ஒப்பந்தக்காரர் மற்றும் மாநகர பொறியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வ.உ.சிதம்பரனார் மைதானத்தின் எஞ்சிய கேலரி கட்டிடத்தின் கூரைகளையும் உரிய நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை மெய்ப்பிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அச்சமின்றி வஉசி மைதானத்தில் நடமாட முடியும். இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.மனு அளிக்கும் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பெரியபெருமாள், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னதுரை, மேகை சக்திகுமார், சிந்து முருகன், மோகன், சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், ஹயாத், மாவட்டப் பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், டவுன் ஜெ.,பேரவை செயலாளர் சீனி முகமது சேட், விவசாய அணி கனித்துரை, வட்ட செயலாளர்கள் பாறையடி மணி, நத்தம் வெள்ளப்பாண்டி, வண்ணை கணேசன், நிர்வாகிகள் ஆர்.எஸ்.மணி, சென்ட்ரல் தியேட்டர் சொரிமுத்து, ஜாகீர் உசேன், ஜெ. பேரவை தங்கபிச்சையா, வாஸ்து தளவாய், கவுன்சிலர் சந்திரசேகர், நெடுஞ்செழியன், முத்துராஜ், தச்சை மாதவன், ஓ.எம்.ரசாக், நவ்சாத், தாழை மீரான், டால் சரவணன், வெள்ளரி ஐயப்பன், பக்கீர் மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிமுகவினரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் ‘‘பாளை வஉசிதம்பரனார் மைதானத்தில் மேற்கூரைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வஉசி மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட பணி குறித்து ஆய்வு செய்ய சென்ைன அண்ணா பல்கலைக் கழகத்தின் நிபுணர்கள் குழு நெல்லை வருகிறது. அக்குழுவினர் மேற்கூரை உள்பட புதுப்பிக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்வர். அவர்களது அறிக்கையின் பேரில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post பாளை வஉசி மைதானத்தின் கேலரி மேற்கூரை இடிந்த விவகாரம் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Palai Vausi Maidan ,Nellai ,Palai Vausithambaranar stadium ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...