×

பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் தேர் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 

பெரம்பலூர், மே 19: பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சொரிதலுடன் தொடங்கியது.

கடந்த 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காப்புக் கட்டுதல் விழாவும், அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கடந்த 16ம் தேதி வெள்ளிக் கிழமை காலை மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்தல், மலையாயி அம்மனுக்கு குடி அழைப்பு மற்றும் பொங்கல் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. 17ம் தேதி சனிக்கிழமை பகல் 12மணிக்கு பிறகு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. இரவு சிம்ம வாகனத்தில் அருள் சக்தி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

கோயிலில் இருந்து மங்கள இசையுடன் அம்மன் தேருக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் ஊரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. அப்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிந்தது. பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் தேரை மழையில் நனைந்தபடி இழுத்துவந்தனர். பின்னர் தேர் கோயிலை வந்தடைந்தது. இதில் பாலையூர் மற்றும் வேப்பந்தட்டை, தொண்டபாடி, பாண்டகப்பாடி, வெண்பாவூர், நெய்குப்பை, வி.களத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

The post பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் தேர் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Arulshakthi Mariamman chariot festival ,Palaiyur ,Perambalur ,Arulshakthi Mariamman temple festival ,Arulshakthi Mariamman temple ,Thondapadi ,Veppandhattai taluka ,Perambalur district ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...