×

பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரம் முதல்வர் தலையிட வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக நிதியமைச்சர் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மீண்டும் ஒருமுறை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நம்பிக்கையுடன் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அரசுக்கு பி.எப்.ஆர்.டி. அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார். தனிநபர் கணக்கில் இருக்கிற பணத்தை எடுக்கும் பிரச்னை ராஜஸ்தான் அரசுக்கு இருக்கிறதே தவிர, தமிழக அரசு பி.எப்.ஆர்.டி.யில் சேரவில்லை என்கிற போது தமிழகத்திற்கு அந்தப் பிரச்னையே கிடையாது. எனவே இதை மேற்கோள்காட்டுவது பொருத்தமற்றதாகும். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் 15 லட்சம். ஆனால் 9 லட்சம் பேர் மட்டும் தான் தற்போது பணியில் இருக்கிறார்கள். எனவே நிரப்பப்படாத 6 லட்சம் பேரின் பணியையும் சேர்த்து, பணியில் இருக்கும் 9 லட்சம் பேர் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நிதிச்சுமை என காரணம் காட்டுவது சரியல்ல. இந்தப் பிரச்னையில் மட்டும்  நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல. அது நவீன தாராளமய கொள்கையை அமல்படுத்துகிறவர்கள் ஊழியர்களுக்கு பென்சன் உள்ளிட்ட உரிமைகளை பறிக்கிற வகையில் சமீபத்திய காலத்தில் சொல்லப்படுகிற வாதங்களே தவிர அதில் புதிதாக ஏதும் கிடையாது.  நவீன தாராளமய கொள்கை முழுக்க முழுக்க சமூகநீதிக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அறிக்கையை, சமூக நீதியை நிலைநாட்டுகிற ஒரு அரசின் அங்கமாக இருக்கக்கூடிய நிதியமைச்சர் மேற்கோள்காட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. பழைய பென்சன் திட்டத்தை அமலாக்குவதால் கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங்களை அமல்படுத்தும் பணியில் பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை மக்களுக்கான அரசு சுமை என கருதக் கூடாது, அதை தன் கடமையாக உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். எனவே, ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்  மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் சூழ்நிலையையும், அதன் நியாயத்தையும் கணக்கில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தெளிவான அறிவிப்பினை வெளியிட முதல்வர் உறுதி செய்திட வேண்டும்….

The post பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரம் முதல்வர் தலையிட வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CM ,Balakrishnan ,Chennai ,State Secretary of ,Communist Party of India ,Tamil Nadu ,Finance Minister ,
× RELATED ஈஷா யோகா மையத்தின் மீது பாரபட்சமற்ற...