×

பலாத்காரம் – 6 முறை கருக்கலைப்பு திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் ஊழியர் எரித்துக்கொலை: கோவை சிமென்ட் கடைக்காரர் மனைவிக்கு வலை

கோவை : கோவையில் பெண் ஊழியரை தீ வைத்து எரித்துக்கொலை செய்த சிமென்ட் கடை உரிமையாளர், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.ஈரோடு  மாவட்டம் பவானி அருகே கருணாபுரத்தை சேர்ந்தவர் மலர் (37). கணவரை பிரிந்து பெற்றோர்  வீட்டில் வசித்து வந்த இவர், பவானியில் உள்ள சிமென்ட்,  டைல்ஸ்  கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த கடை உரிமையாளரான  கோவை ஆர்.எஸ். புரம் கண்ணுசாமி வீதியை சேர்ந்த நவநீதன் (50),  அடிக்கடி மலரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. தனக்கு குழந்தை இல்லை என்பதால் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மலர் கர்ப்பம்  அடைந்தார். இதைத்தொடர்ந்து நவநீதன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 6  முறை கருக்கலைப்பு செய்துள்ளதாக  தெரிகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மலர், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நவநீதனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.கடந்த 29ம் தேதி மலர் கோவைக்கு வந்து, நவநீதனின் வீட்டுக்கு சென்று தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்  செய்தது தொடர்பாக முறையிட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நவநீதன் மற்றும்  அவரது மனைவி அகிலா (45) ஆகியோர் மலரை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ  வைத்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய மலரை அக்கம்பக்கத்தினர்  மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் இதனை மறைத்து, ‘‘ரூ.50  ஆயிரம் கடன் கேட்டார். பணம் தராததால் மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளித்தார்’’ என நவநீதன் தரப்பினர் கூறியுள்ளனர். இதையடுத்து ஆர்.எஸ். புரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையின்போது மலர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் நவநீதன் மற்றும் அவரின் மனைவி குறித்து புகார்   தெரிவித்திருந்தார். பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதையும், 6 முறை கருக்கலைப்பு செய்ததையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் வேலை செய்த நிறுவனத்தில் நவநீதனின் அத்துமீறல், பலாத்காரம் மற்றும்   கருக்கலைப்பு குறித்த விவரங்களை வீடியோ பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை எடுத்தபோது நவநீதன் செல்போனை பறிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானது. மேலும் மருத்துவமனையில் மலர் சிகிச்சையில்  இருந்தபோது அளித்த வாக்குமூலத்தில், தன் மீது நவநீதனும், அகிலாவும்  பெட்ரோல்  ஊற்றி தீ வைத்தனர் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் நவநீதன், அகிலாவை கண்காணிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மலர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மலரின் உறவினர்கள்  முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, சடலத்தை வாங்க  மறுத்தனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து உடலை பெற்றுச்சென்றனர்.இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக உள்ள நவநீதன், அகிலா ஆகியோரை தேடி வருகின்றனர். பலாத்காரம் செய்து ஏமாற்றியது தொடர்பாக கேட்க வந்த பெண்ணை கணவனும், மனைவியும் சேர்ந்து எரித்துக்கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post பலாத்காரம் – 6 முறை கருக்கலைப்பு திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் ஊழியர் எரித்துக்கொலை: கோவை சிமென்ட் கடைக்காரர் மனைவிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!