×

பத்தாண்டு சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தியுள்ளார்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பத்தாண்டு சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தியுள்ளார் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கி.வீரமணி ( திராவிடர் கழகத் தலைவர்): ‘திராவிட  மாடல் ஆட்சி’யின் அடிப்படை உரிமைகளில் முதன்மையானது மாநில உரிமை. இதனை  நிலைநிறுத்துவதற்காக தயக்கமின்றி ஒன்றிய அரசை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்புகின்றார் நம் முதல்வர். பதவிக்கு வந்த பிறகு ஒன்றிய அரசுக்கு பல்லக்கு தூக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல் ஒன்றிய அரசின்  மாநிலங்களுக்கு எதிரான போக்குகளைக் கண்டிக்கும் நாட்டின் முதன்மையான  முதல்வராக உள்ளார்.தஞ்சை களிமேடு தேர் விபத்து மற்றும் அடித்தட்டு  மக்களின் குரலைக்கேட்டு ஓடோடிச்சென்று அவர்களின் தேவைகளை நேரடியாக  நிறைவேற்றுவது, முந்தைய மாநில மற்றும் ஒன்றிய அரசுகளைப் போல் வெளிநாட்டு முதலீடு என்ற ‘மாய வித்தை’களைக் காட்டாமல் ஒரு வெளிநாட்டுப் பயணம்,  அதன்மூலம் பெற்ற அந்நிய முதலீடுகள் அதில் பலவற்றை உடனடியாக நிறைவேற்றிய செயல் திறன்களால் மக்களின் நம்பிக்கையை வென்ற முதல்வராக உள்ளார். ‘திராவிட  மாடல் ஆட்சி’யின் ஒராண்டு சாதனைகள் ஒருபக்கத்தில் முடிந்துவிடுவன அல்ல. இன்னும் நான்கு ஆண்டுகளில் குவிய இருக்கும் சாதனை மலைகளின் முன் எதிர்க்கட்சிகளும், மதவாத ஆதிக்க சக்திகளும் கண்ணுக்கே தெரியமாட்டார்கள்  என்பது உறுதி. சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சருக்கு மனம் நிறைந்த  வாழ்த்துகள்.கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் தலைவர்): தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கிறது என்றுச் சொன்னால் அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பு தான் காரணமாகும். இதன்மூலம் உழைப்பே உயர்வு தரும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பெரும் கடன் சுமையோடு தான் முதல்வராக பொறுப்பேற்றார். இத்தகைய கடன் சுமையை ஏற்றுக் கொண்டு மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியை வழங்குவதற்கு உரிய நிதி ஆதாரங்களை திரட்டி, சிறப்பான தொரு ஆட்சியை ஓராண்டு காலமாக நடத்தி வருகிறார்.தமிழக அரசின் சார்பில் ஒட்டுமொத்தமாக 2875 கொள்கை ரீதியிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 87 சதவிகிதத்திற்கும் மேலான அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் பாதிக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்வரைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தி மக்களின் பேராதரவையும், பெருமதிப்பையும் நாள்தோறும் பெற்று செயல்பட்டு வருகிறார். எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற ஓராண்டு நிறைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்): இப்படியொரு முதலமைச்சரைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தோம்? என்று விதந்து வியந்து களிப்பில்மூழ்கியிருக்கிறது தமிழகம். இது என்றும் தொடர வேண்டும். இந்த நல்ல எண்ணம் எல்லா இடத்திலும் படர வேண்டும். இதற்கு நாம் எல்லோரும் வாழ்த்துவோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொள்கைவேறுபாடு கடந்து ஆதரவுக் கரம் நீட்டுவோம். உயர்வுக்குஒத்துழைப்போம்.எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்): ஒரு ஆண்டுக்குள் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சாமானிய மக்களும் பயன்பெறும்  வகையில் தமிழகத்தை வழி நடத்தி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  பாராட்டுகள். பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளமான நிலைக்கு அழைத்துச் சென்று இன்று ஓராண்டில் நூறாண்டு சாதனை, வரும் காலங்களில் பல  நூறாண்டு சாதனையாக திகழ வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்….

The post பத்தாண்டு சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தியுள்ளார்: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...