×

பணத்தை திரும்ப வழங்க கோரி பிஏசிஎல் நிறுவன முதலீட்டாளர்கள் மனு

 

ஈரோடு, ஜன். 9: பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்துள்ள மனு விவரம்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பிஏசிஎல் நிறுவனத்தில் தேசிய அளவில் 5.85 கோடி முதலீட்டாளர்கள் ரூ.49,100 கோடி முதலீடு செய்துள்ளனர்.

தமிழ் நாட்டில் 1 கோடி பேர், ரூ.10,000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனம், நாட்டில் உள்ள 23 மாநிலங்களில், 3.85 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கி உள்ளது. பல்வேறு காரணங்களால் இந்நிறுவனம் முடங்கி, முதலீடு செய்தோருக்கு முதிர்வு தொகையும், பணத்தை திரும்பக் கேட்டவர்களுக்கு முழு தொகையும் வழங்காமல் உள்ளது.

அந்நிறுவனத்தின் சொத்துக்களை கண்டறிந்து விற்பனை செய்து, 6 மாத காலத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை முதலீட்டாளர்களுக்கு பண வழங்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை, விசாரணை என நீண்டு கொண்டே செல்வதால், முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதலீட்டாளர்களுக்கு உரிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

The post பணத்தை திரும்ப வழங்க கோரி பிஏசிஎல் நிறுவன முதலீட்டாளர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : PACL ,Erode ,Erode Collector's Office ,Collector ,Rajagopal Sunkara ,People's Day ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...