×

படிக்கட்டில் தொங்கியபடி சென்றதால் விபரீதம்: மாநகர பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவனின் 2 கால்கள் அகற்றம்

* கதறி அழுத பெற்றோர்
* குன்றத்தூரில் சோகம்

பல்லாவரம், நவ.19: குன்றத்தூரில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது மாநகர பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவனின் 2 கால்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘படியில் பயணம், நொடியில் மரணம்’’ என்று அரசு பேருந்துகளில் எழுதி போட்டிருந்தாலும், படியில் தொங்கியபடி சாகச பயணம் செய்வதே மாணவர்களின் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடியும், ஜன்னல் மீது நின்றபடியும், செருப்பை சாலையில் தேய்த்தபடியும் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர்.

போக்குவரத்து போலீசார், பொதுமக்கள், பெற்றோர் என எத்தனை பேர் அறிவுரை கூறினாலும், இதுபோன்ற செயல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு படியில் தொங்கியபடி பயணம் செய்பவர்களில் பலர் அவ்வப்போது தவறி விழுந்து படுகாயமடைந்தாலும், மாணவர்கள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. இந்நிலையில், குன்றத்தூர் அருகே மாநகர பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது, தவறி விழுந்து படுகாயமடைந்த பள்ளி மாணவனின் 2 கால்கள் அகற்றப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி 4 வழிச்சாலை சந்திப்பு அருகே, சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் பலர் மாநகர பேருந்துகளில் தினசரி பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இவர்களில் பலர் பேருந்தில் ஆபத்தான முறையில், படியில் தொங்கியபடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இப்பள்ளி மாணவர்கள், பள்ளி முடிந்ததும் அந்த வழியாக குன்றத்தூர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்களில் சிலர், படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து குன்றத்தூர் தேரடி அருகே சென்றபோது, படியில் தொங்கியபடி சென்ற 11ம் வகுப்பு மாணவன் சந்தோஷ் (16), திடீரென தவறி கீழே விழுந்தான். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் மாணவனின் 2 கால்கள் மீதும் ஏறி இறங்கியது.

படுகாயமடைந்த மாணவனை அப்பகுதி மக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவனின் 2 கால்களும் பாதத்திற்கு கீழ் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெட்டி அகற்றினர். இதை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எச்சரிக்கை
ஆபத்தை உணராமல், விளையாட்டாக படிக்கட்டில் தொங்கி பயணித்த மாணவன், தவறி விழுந்து தனது 2 கால்களையும் இழந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பேருந்துகளில் இதுபோல் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்களுக்கு இதுஒரு பாடம் எனவும், இனிமேலாவது பேருந்தில் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

The post படிக்கட்டில் தொங்கியபடி சென்றதால் விபரீதம்: மாநகர பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவனின் 2 கால்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kunradthur Pallavaram ,Kunradthur ,
× RELATED உரிமையாளர் வாக்கிங் அழைத்து...