×

நோய் முதல் நாடி

கொரோனாவின் பயமுறுத்தல்கள் ஒருபக்கம் இருக்க, தற்போது டெங்கு, ஜிகா வைரஸ், டெல்டா பிளஸ் உள்ளிட்ட பாதிப்புகள் மறுபக்கம் அச்சமூட்டுகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அந்த வைரஸ் ஊடுருவும் அபாயம் உள்ளது. கேரள எல்லையோர மாவட்டங்கள் வழியாக தமிழகம் வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கேரள – தமிழக எல்ைலயில் கிருமிநாசினி தெளிப்பு, சோதனை சாவடிகளில் தீவிர பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.தமிழக மக்கள் கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரசின் 2ம் அலையின் கொடுமையை அனுபவித்தனர். இந்நிலையில் ஜிகா வைரஸ், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் மீண்டும் உருவானால், அனைத்து தரப்புமே அவதிக்குள்ளாகும். தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழலில், வைரஸ் நோய்கள் வீரியம் அடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே தமிழக மக்கள் இத்தகைய நோய்களை எச்சரிக்கையோடு அணுக வேண்டும்.கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தூய்மை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பு பணிகள் சுகாதார துறையால் முடுக்கி விடப்படும் சூழலில், பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். கேரளாவில் இருந்து ரயில்களில் வரும் பயணிகளை சோதிப்பது, வைரஸ் தடுப்பு மருந்துகளை போதிய அளவில் கையிருப்பில் வைத்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளில் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் நோய் முதல் நாடியாக தென்படுகின்றன. கொரோனா இரண்டாம் அலைக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தடை போட்டிருந்தால், இந்தளவுக்கு தமிழகத்தில் பாதிப்புகள் இருந் திருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அவசியத்தை கொரோனா இரண்டாம் அலையில் தமிழகம் கற்றுக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் தற்போது நோய் பாதிப்புகளை தடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் மருத்துவ கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள, கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள  இடங்களை கண்டறிந்து ஏடிஎஸ் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தேவையான மருந்துகளையும் போதுமான அளவு கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ரத்த வங்கிகளில் ரத்த தட்டணுக்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். பாதிப்புகளை உடனே கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தேவையான அளவு ரத்த தட்டணுக்கள் இருப்பு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தால் எந்த நோயும் நம்மை அண்டாது. நோய் நாடி, நோய் முதல் நாடிகளை அறிந்து கொண்டாலே, அவற்றை தடுக்கும் முறைகள் நமக்கு எளிதாகும்….

The post நோய் முதல் நாடி appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்