×

நெல்லை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.900 கோடி கடன் வழங்க இலக்கு

நெல்லை, ஜூன் 16: நெல்லை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.900 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் நெல்லை மண்டலம் சார்பில் ‘காபி வித் கலெக்டர்’ என்னும் நிகழ்ச்சி பாளை அரசு அருங்காட்சியகத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்று தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நதிநீர் இணைப்பு) சுகன்யா பங்கேற்றார். புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சுமார் 100 பேர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் புத்தொழில் செய்வதற்கு உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களை கூறி மாவட்ட கலெக்டரோடு கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் கலெக்டர் கார்த்திகேயன் பேசுகையில் ‘‘நெல்லையில் புத்தொழில் நிறுவனங்கள் வேகமாக உருவாகி வருகின்றன. இந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. நெல்லையில் அமைந்துள்ள புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தை பயன்படுத்தி உங்கள் நிறுவனங்களை பெரும் நிறுவனமாக உருவாக்கிக் கொள்ளுங்கள். புத்தொழில்களை ஊக்கப்படுத்தி வெளி உலகிற்கு தெரியப் படித்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் வழியாக கண்காட்சி நடத்தப்படும்.

நெல்லை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க இவ்வாண்டு ரூ.900 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு செல்லும்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோரை சந்திக்க நேரிடுகிறது. நெல்லை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களை பதிவு செய்வதில் அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்’’ என்றார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் நெல்லை மண்டல திட்ட இயக்குநர் ராகுல், இணை அலுவலர்கள் ஜிஜின் துரை மற்றும் திலகா, அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி மற்றும் பிராண்ட் மேக்ஸிமா நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை பயிற்சியாளர் திலீபன் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நெல்லை மண்டல இயக்கத்தினர், டிஜிட்டால் நிறுவனத்தினர், ஜே.சி.ஐ. பாளையங்கோட்டை நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post நெல்லை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.900 கோடி கடன் வழங்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Nellie district ,Nellai ,Nellai district ,Dinakaran ,
× RELATED நெல்லையில் இன்று காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்