×

நெய்க்குப்பை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி திருவிழா

பெரம்பலூர்,ஜூன் 7: நெய்க்குப்பை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தீ-மிதி திருவிழா. குழந்தையுடன், கும்பத்துடன் என 70க்கும் மேற்பட்டோர் தீ-மிதித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, நெய்க்குப்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் திரௌபதி அம்மனுக்கு, பாரத சொற்பொழிவு மற்றும் தீமிதி திருவிழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி கடந்த மே மாதம் 19ம் தேதி திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு சாமி குடி அழைப்பும், மாலை 6 மணிக்கு கொடியேற்றுதலும் நடைபெற்றது. 30ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு திருக்கல்யாணம் வைபோக நிகழ்ச்சி நடை பெற்றது. நேற்றுமுன்தினம் (5ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சோறு ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சாமி திரு வீதி உலா மற்றும் கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (6ம்தேதி) வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் அக்கிரமத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் தோள்களில் குழந்தையுடனும், தலையில் கும்பத்துடனும், கைகளில் வேப்பிலைகளுடனும் பக்தியுடன் இறங்கி தீமித்தனர். இதனைக் காண நெய்க்குப்பை கிராம மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள பிம்பலூர், பசும்பலூர், பாண்டகப்பாடி, அனுக்கூர், தொண்டப்பாடி பாலையூர், வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரௌபதி அம்மன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை பக்தியுடன் வழிபட்டுச் சென்றனர். இரவு 10 மணிக்கு நாடகம் நடைபெற்றது. இன்று காலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம் அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் இரவு தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

The post நெய்க்குப்பை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Thee-Mithi festival ,Neykuppai village ,Perambalur ,Bharatha ,Draupadi Amman ,Veppandhattai taluk ,Perambalur district… ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...