‘சாமானியனுக்கு முதல்வர் பதவி’அசாமில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தருண் கோகாயை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் கூட்டணி. அதில், தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணியில் ஏற்பட்ட சில குழப்பங்கள், பாஜ.வுக்கு சாதகமாகி விட்டன. அதனால், இந்த தேர்தலை முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே சந்திக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைமை. ‘‘பாஜ ஆட்சியை அகற்றுவதே இப்போது எங்களின் ஒரே லட்சியமாக இருக்கிறது. அதனால், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான், முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும். இதில், இந்த முறை கட்சியின் சாமானிய தொண்டன் கூட முதல்வராக வாய்ப்புள்ளது,’ என்று கூறியுள்ளார் காங்கிரசின் அசாம் மாநில பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங்.’கூட்டணி ஆட்சி கனவில் பாஜ.’ஒரே நாடு, ஒரே ஆட்சி என்ற குறிக்கோளுடன் பாஜ செயல்பட்டு கொண்டிருக்கிறது. தென் மாநிலங்களில் தனது கனவை நனவாக்க முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரியும் அதன் பட்டியலில் இப்போது சேர்ந்துள்ளது. அதன் முதல் கட்டம்தான், காங்கிரஸ் மூத்த தலைவர் நமச்சிவாயத்தை வளைத்து போட்டது. பாஜ.வின் இந்த கூட்டணி ஆட்சி திட்டத்தை, புதுவைக்கு நேற்று வந்திருந்த மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன் ராமும் தெரிவித்தார். இதனால், அதன் வலையில் இன்னும் எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் சிக்கி, தாமரையின் வாசனையில் மயங்குவார்களோ என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது.’கம்யூ., ஆதரவுடன் உம்மன் சாண்டிக்கு எதிராக சுயேச்சை’கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி போட்டியிட்ட புதுப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்டாலும், கடந்த தேர்தலில் கேரளா காங்கிரஸ் (மாணி) இடதுசாரியுடன் சேர்ந்ததால், அத்தொகுதியில் இடது முன்னணி களமிறங்கியது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், இடது முன்னணி அங்கு வெற்றி பெற்றது. அத்துடன் சேர்த்து புதுப்பள்ளி தொகுதிக்குட்பட்ட 6 கிராம பஞ்சாயத்துகளிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக, புதுப்பள்ளி தொகுதியில் உம்மன்சாண்டிக்கு எதிராக இடதுசாரி ஆதரவுடன் சுயேச்சையை களமிறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த யோசனைக்கு ஆதரவு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசித்து வருகிறது. ‘சூடுபட்ட பூனை போல் உஷாராக உள்ள மம்தா’பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். அப்படி இருந்தும் கடந்த மாதம் 23ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மோடியுடன் அவரும் பங்கேற்றார். இவரும் பேசிக் கொள்ளவில்லை. விழாவில் மம்தா பேச எழுந்தபோது, பாஜ தொண்டர்கள், ‘ஜெய் ராம்’ என கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் பேசாமல் திரும்பி விட்டார். நேற்று மேற்கு வங்கத்துக்கு வந்த பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் பங்கேற்கும்படி மம்தாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே பட்ட சூட்டின் தழும்பு ஆறாமல் உள்ள மம்தா, மோடி நிகழ்ச்சிகளை முழுமையாக தவிர்த்து விட்டார்….
The post நாலா பக்கம் appeared first on Dinakaran.