×

நாட்டின் வளர்ச்சியால் எம்.பி.க்கள் சிலருக்கு பொறாமை: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதங்கம்..!

டெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பொறாமைப்படுவதாகவும், நாடு வளர்கிறது என்று சொன்னால் அதை சில எம்.பி.க்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்வதாகவும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மக்களவையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி., ஏ.ஆர்.ரெட்டி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரூபாய் மதிப்பு சரிவு குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.பி., ஏ.ஆர்.ரெட்டி 2014-ல் ரூபாய் மதிப்பு சரிந்த போது இந்திய ரூபாயின் மதிப்பு அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக மோடி கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார். தற்போது ரூபாய் மதிப்பு பிணவறையில் உள்ளதா என்றும் ஏ.ஆர்.ரெட்டி கேள்வி எழுப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிர்மலா சீதாராமன் உலக பொருளாதாரமே அவசர சிகிச்சை பிரிவில் தான் உள்ளது என்றார். ஆனால், உக்ரைன் ரஷ்யா போர் கொரோனா போன்றவற்றை தாக்குப்பிடித்து இந்திய பொருளாதாரம் உறுதியாக நிற்கிறது என்றும் விளக்கமளித்தார். இந்தியா வளர்கிறது என்று சொன்னால் அதை கேட்டு பெருமிதம் கொள்வதை விட்டுவிட்டு உறுப்பினர்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்து கொள்வதாகவும் நிர்மலா சீதாராமன் சாடினார். கேள்வி நேரத்தில் பேசிய திருப்பூர் எம்.பி.சுப்பராயன் பெருநிறுவனங்களின் பலாயிரம் கோடி ரூபாய் வார கடன்கள் மட்டும் வங்கிகளால் ரத்து செய்யப்படுவதாக கூறினார். பெருநிறுவனங்களுக்கு கடனில் சலுகை காட்டும் ஒன்றிய அரசு கல்வி கடன்களையும் ரத்து செய்யுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு நேரடியாக பதிலளிக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருநிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு சலுகை ஏதும் காட்டவில்லை என்றார். ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டாலர் மதிப்பு மட்டுமே உயர்ந்து வருவதாகவும் மக்களவையில் நிர்மலா சீதாராமன் மீண்டும் குறிப்பிட்டார். இந்த பதிலை கேட்டு பலர் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் வெளியிடுவர் என்ற அவர், அதைபற்றி தமக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.         …

The post நாட்டின் வளர்ச்சியால் எம்.பி.க்கள் சிலருக்கு பொறாமை: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதங்கம்..! appeared first on Dinakaran.

Tags : M. GP ,finance minister ,nirmala sitharaman ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா...