நாசரேத், மே 30: தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் முதன்மையாக ஒன்றாக நாசரேத் திகழ்கிறது. இங்கு கேவிகே சாமி சிலை அருகேயுள்ள பிரதான சாலையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பகுதியில் உள்ள சாலையானது தொடர்ந்து பெய்த கோடை மழையாலும், முறையான பராமரிப்பின்றியும் பாழாகி வந்தது. மருந்துக்குக்கூட பராமரிக்கப்படாத காரணத்தால் குண்டும், குழியுமாகவும், ராட்சத பள்ளங்கள் நிறைந்தும் போக்குவரத்து லாயக்கற்ற நிலைக்கு தற்போது மாறியுள்ளது. இருப்பினுன் வேறு வழியின்றி இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லுரி களுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவிகள் , ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள், வியாபாரிகள் இதன் வழியாக செல்கின்றன.
மேலும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கும், புன்னை நகர் வனத்திருப்பதி கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கும் செல்வோர் இந்த சாலை வழியாகத்தான் வாகனங்கள் செல்கின்றன. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகச் செயலாளரும், நாசரேத் பேரூராட்சி மன்ற 3வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ்குமார் கூறுகையில் ‘‘இவ்வாறு முறையான பராமரிப்பின்றி ரயில்வே கேட் பகுதி சாலையானது முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இச்சாலையை பயன்படுத்தும் மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வயதானோர் கடும் அவதிப்படுகின்றனர்.
வாகனங்களும் பழுதாவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இச்சாலையை போர்க்கால அடிப்படையில் விரைவில் சீரமைப்பது அவசியம்’’ என்றார். இதே கருத்தை வலியுறுத்தியுள்ள வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் ெசலுத்தி மழையால் சேதமடைந்து கிடக்கும் நாசரேத் ரயில்வே கேட் சாலையை சீரமைக்க முன்வருவார்களா? என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
The post நாசரேத் ரயில்வே கேட் அருகே கோடை மழையால் சேதமடைந்த சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.