×

நாகர்கோவிலில் கறிக்கோழி விலை கிலோ ரூ.175 ஆக உயர்வு: காய்கறிகள் விலையும் அதிகரிப்பு

 

நாகர்கோவில், மே 26: நாகர்கோவிலில் கறிக்கோழி விலை கிலோ ரூ.175 ஆக உயர்ந்துள்ளதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாமக்கல், ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற கறிக்கோழி பண்ணைகளில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கறிக்கோழி சப்ளை செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு வாயிலாக நிர்ணயம் செய்யப்படுகிறது. தினசரி இந்த விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த விலை சில்லறை விற்பனையில் எதிரொலிக்கும்.

தற்போது வட மாவட்டங்களில் பலவற்றிலும் பலத்த வெயில் காரணமாக கறிக்கோழி உற்பத்தி குறைந்தது. அதே வேளையில் விடுமுறை காலம் என்பதால் கறித்கோழி தேவை அதிகரித்தது. உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை கிடுகிடு என உயரத்தொடங்கியுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாகர்கோவிலில் ஒரு கிலோ கறிக்கோழி இன்று ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்கள் முன்பு ரூ.165 வரை உயர்ந்திருந்த கறிக்கோழி விலை பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்தநிலையில் மீண்டும் திடீரென்று விலை உயர்ந்துள்ளது. கறிக்கோழிக்கு தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் கறிக்கோழி வாங்குவதையும் தவிர்த்து வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் சிக்கன் சார்ந்து தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்களின் விலையையும் கடைகாரர்கள் உயர்த்தியுள்ளனர். அசைவ உணவுகள் விலை உயர்வால் ஓட்டல்களில் விற்பனையும் மந்த கதியில் உள்ளது.

இதற்கிடையே நாகர்கோவில் மார்க்கெட்களில் காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலே பல்லாரி ரூ.29க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் கிலோ ரூ.64, நாட்டு தக்காளி ரூ.48, பெங்களூரு தக்காளி ரூ.49, உருளைக்கிழங்கு ரூ.48, முருங்கைக்காக ரூ.40, காலிபிளவர் ரூ.70, கோவக்காய் ரூ.72, முட்டைக்கோஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.46, வெள்ளரிக்காய் ரூ.44, கேரட் ரூ.69, பூசனிக்காய் ரூ.31, சின்ன வெங்காயம் ரூ.60, புடலங்காய் ரூ.60, தடியன்காய் ரூ.30, சேனை ரூ.75, சேம்பு ரூ.76, பச்சைமிளகாய் ரூ.87.50, இஞ்சி ரூ.200, பூண்டு, ரூ.290, எலுமிச்சை ரூ.190, பீன்ஸ் ரூ.80, சுரைக்காய் ரூ.20, கத்தரிக்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நாகர்கோவிலில் கறிக்கோழி விலை கிலோ ரூ.175 ஆக உயர்வு: காய்கறிகள் விலையும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Namakkal ,Erode ,Palladam ,Tamil Nadu ,Kerala, ,Andhra Pradesh ,Karnataka ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...