×

தொடர் மழையில் நனைந்த நெல்லுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம், மே 20: திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வழுவதூர் ஊராட்சியில் அடங்கிய காட்டூர் கிராமத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு எனப்படும் நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையத்தில் காட்டூர், வழுவதூர், கிளாப்பாக்கம், வெள்ளைப்பந்தல், வல்லிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கான சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை இந்த கொள்முதல் நிலையத்தில் அளித்து அதற்கான பில் பெற்று ஒரு மாதம் கடந்தும் இதுவரை விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் வந்து சேரவில்லை. இது மட்டுமின்றி மேலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கடந்த இரு தினங்களாக பெய்து வருகின்ற கன மழையில் கொள்முதல் செய்யப்படாத நெல் குவியல்கள் நனைந்து, முளைத்தும் விட்டது.

இதனிடையே, ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகையை விவசாயிகளுக்கு வழங்கக்கோரியும், மீதமுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்யக் கோரியும், மழையால் சேதமான நெல்லுக்கான இழப்பீட்டை வழங்க கோரியும், இனி வருங்காலங்களில் ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பை தவிர்த்து, தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வாசுதேவன், பொருளாளர் விஜயகாந்த் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காட்டூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் திருக்கழுக்குன்றம் – மதுராந்தகம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post தொடர் மழையில் நனைந்த நெல்லுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thirukkazhukundram ,National Consumers' Federation ,Union Government ,Kattur ,Vazhuvathur panchayat ,Thirukkazhukundram taluka ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...