×
Saravana Stores

தொடர் மழையால் நிரம்பி வரும் கண்மாய்,குளங்கள் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

மானாமதுரை: மானாமதுரை வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கண்மாய் குளங்கள் நிரம்பி வருகின்றன. கரைகளை பலப்படுத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக வருவாய்த்துறை, பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மானாமதுரை வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 142 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் கண்மாய், குளங்களில் தண்ணீர் இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் கண்மாய்கள், குளங்களில் கரையை தொடும் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. இதனால் நகர், கிராமப்புற மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால், ஆழ்துளை கிணறுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் மானாமதுரை வைகை ஆற்றிலும் தண்ணீர் செல்வதால், பல்வேறு கிராமங்களில் வாய்க்கால்கள் மூலம் கண்மாய்களுக்கு மழைநீர் செல்கிறது. பெரிய பரப்பளவு கண்மாய்கள், முதல் சிறிய குளங்கள் வரை வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் கூறுகையில், மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட அனைத்து கண்மாய்கள், குளங்களை தினமும் மழைக்கு முன்பும், மழைக்கு பின்பும் கிராம உதவியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கண்மாய்கரைகளில் உடைப்பு, மழைநீர் நிறைந்து மாறுகால் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள வருவாய்த் துறையினர், ஊராட்சி பிரதிநிதிகள் மூலம் தகவல் கொடுக்குமாறு கூறியுள்ளோம். பள்ளமான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இரவு நேரங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

The post தொடர் மழையால் நிரம்பி வரும் கண்மாய்,குளங்கள் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Manamadurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் தண்ணீர் இன்றி...