பூந்தமல்லி, ஆக. 1: திருவேற்காட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உறவினர் மூலம் நகைகளை கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காடு அயனம்பாக்கம், ஈஜிபி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(45). வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா(40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ₹50 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கொள்ளையர்களின் ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும், வழக்கு பதிந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், ஜனார்த்தனனே தன்னுடைய உறவினர் தியாகராஜன் என்பவரை வைத்து நகைகளை கொள்ளையடித்தது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து தியாகராஜனை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 60 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரிடமும் தொடர்ந்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜனார்த்தனன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடியதில் நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்காக வீட்டில் இருந்த மனைவியின் நகைகளில் 43 பவுன் நகையை கொஞ்சம் கொஞ்சமாக விற்று செலவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனார்த்தனன் வடபழனியைச் சேர்ந்த தனது உறவினரான தியாகராஜன்(38) என்பவரிடம் வீட்டு சாவியை கொடுத்து தாங்கள் குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது வந்து பீரோவில் உள்ள 60 பவுன் நகையை எடுத்து பத்திரமாக வைத்திருக்கும் படி கூறியுள்ளார். அவர்கள் திட்டமிட்டது போல கடந்த 28ஆம் தேதி ஜனார்த்தனன் குடும்பத்துடன் வெளியில் சென்ற போது தியாகராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தியாகராஜன் ஜனார்த்தனன் வீட்டிற்கு வந்து 60 பவுன் நகையை எடுத்து சென்று விட்ட நிலையில் நகைகள் கொள்ளைபோனதாக ஜனார்த்தனன் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர்.
₹84 லட்சம் நில மோசடியில் ஈடுபட்டவர் கைது
கோடம்பாக்கம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் நில பிரச்னை தொடர்பாக, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த மே 2ம் தேதி, புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், கூறியிருந்ததாவது: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், கொரட்டூர் ஏ கிராமத்தில், என் பெற்றோர் ராகவரெட்டி மற்றும் ராஜேஸ்வரி பெயரில் இருந்த 4.10 ஏக்கர் நிலத்தை, கடந்த 2012ல், பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் எனது பெயரில் கிரையம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். இந்நிலையில், எனது நிலத்துக்கு தனஞ்செழியன் என்பவர் பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இது குறித்து அறிந்த நான், கடந்த 2022ல், நிலத்தின் மீது வில்லங்க சான்று போட்டு பார்த்தேன்.
அப்போது, தனஞ்செழியனின் மனைவி சம்பூர்ணம் என்பவர், போலியான ஆவணங்கள் தயார் செய்து, அவரது மகள்கள் புஷ்பா மற்றும் சந்திரா ஆகியோர் பெயரில் பத்திர பதிவு செய்தது தெரிய வந்தது. இந்த நில மோசடியில் அலெக்சாண்டர்(33) என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ₹84 லட்சம் ஆகும். எனவே, எனது நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் படி, இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், சாட்சி கையெழுத்து போட்டு, தலைமறைவாக இருந்த குமணன்சாவடி, ஆட்கோ நகரை சேரந்த அலெக்சாண்டரை நேற்று கைது செய்தனர். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post திருவேற்காட்டில் 100 பவுன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உறவினர் மூலம் கொள்ளையடித்து நாடகம்: போலீஸ் விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.